தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் கவனிக்கப்படுபவர் இயக்குனர் பாலா. வழக்கமான மசாலா படங்களை தரும் இயக்குனர்களுக்கு மத்தியில், வித்யாசமான கதைக்களத்தில் உணர்வுபூர்வமான படங்களை தருவதில் மிக முக்கிய படைப்பாளியாக இயக்குனர் பாலா இருந்து வருகிறார்.
அவரது இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த சேது, பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது. இந்த படம்தான், நடிகர் விக்ரம் திரை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் விக்ரம் நடிக்க தவறியிருந்தால், ஆகச்சிறந்த ஒரு கலைஞனை தமிழ் சினிமா தவற விட்டிருக்கும். இப்போதும் துணை நடிகர்களில் ஒருவராக, டப்பிங் கலைஞராக விக்ரம் இருந்திக்க கூடும்.
அதே போல் நந்தா படம் மூலம் சூர்யாவின் இன்னொரு முகத்தை ரசிகர்களுக்கு காட்டி, அவரையும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் டைரக்டர் பாலா. அதே போல் அவன் இவன், நான் கடவுள், பரதேசி, தாரை தப்பட்டை, பிதாமகன் படங்களின் மூலம் ஆர்யா, விஷால், அதர்வா, சசிக்குமார் போன்ற ஹீரோக்களை வித்யாசமான நாயகன்களாக காட்டியிருந்தார்.
இப்போது நடிகர் அருண் விஜய் நடிப்பில், டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், சாயாதேவி, ரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் முதன்முறையாக நடித்துள்ள சாயாதேவி, நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி, நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
வணங்கான் படத்தில், முதலில் நடிகர் சூர்யா நடித்த நிலையில், ஒரு மாதம் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட அவர் பின், அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், நடிகர் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இந்நிலையில் வணங்கான் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வணங்கான் படத்தின் அருண் விஜய், வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு படத்தில் டயலாக் கிடையாது. அதனால் இந்த படத்துக்காக அவர் ஒரு வார்த்தை கூட டப்பிங் பேசவில்லை. அருண் விஜய் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாகவும், டைரக்டர் பாலாவுக்கும் பெயர் சொல்லும் படமாகவும் இது இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.





