நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அதற்கு முன்பு இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பார்த்திபன் தேவயானி அஜீத்குமார் நடித்த அவரது முதல் படமே பெரிய வெற்றிப் படமாக ராஜகுமாரனுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் போன்ற படங்களை நடிகை தேவயானியை நாயகியாக நடிக்க அவரே இயக்கினார். 3 படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே ராஜகுமாரன், தேவயானியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, தமிழ்நாடு ஒரு ஆபத்தான நாடு. நீங்க கொஞ்சம் அசந்தா கர்நாடகா, கேரளாவில் இருந்து தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுவாங்க. அடிப்பாங்க. ஆந்திராவில் இருந்து துறைமுகம் வரைக்கும் வந்து சாத்து சாத்துன்னு சாத்துவாங்க.
சரி பேசாமல் இந்த பக்கம் போலாம்ன்னு பார்த்தா 30 கிலோமீட்டர் உள்ளே வந்துட்டாங்கன்னு இலங்கைகாரங்க வந்து மீனவர்களை பிடிப்பாங்க. நாலு புறமும் இப்படி ஆபத்தில் இருக்கிற மாநிலம் தான் இது. மற்ற மாநிலத்துக்கு இப்படியான ஆபத்து எதுவும் கிடையாது.
எவ்வளவு உடன்படிக்கையோடு கட்டமைப்போடு ஒரு முதல்வர் சட்டசபையில் செயல்படும்ன்னு தெரிஞ்சுக்கணும். சிறுசிறு கூட்டணி கட்சி தாக்குதல் இருக்கும். இதையெல்லாம் சமாளிச்சு ஒரு அரசு அஞ்சு வருஷம் ஆட்சி நடத்துறாங்கன்னா அது சாதாரண விஷயம் கிடையாது. எல்லாமே அனுபவம்தான். ஒவ்வொண்ணா கத்துக்கிட்ட அரசியல் பாடம்தான்.
நீங்க பத்து வருஷம் அரசியலை கத்துகிட்டு வந்தா என்ன குறைஞ்சிடும்? அதிமுக திமுக ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்து அரசியலை கத்துகிட்டு வாங்க என்று நடிகர் விஜய் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





