தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் படம் என்றாலே முதலில் ரசிகர்களை கவர்வது படத்தின் டைட்டில்தான். அதனால் எம்ஜிஆர், ரஜினி போன்றவர்கள் படத்தின் டைட்டில் குறித்து மிக கவனமாக இருப்பார்கள். அதிலும் எம்ஜிஆர் நல்ல தலைப்பு கிடைக்கும் வரை விடவே மாட்டார். அவருக்கு கேட்டவுடன் அட என்ற ஆச்சரியத்தை அந்த டைட்டில் தர வேண்டும்.
அதனால்தான் எங்க வீட்டுப்பிள்ளை, தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடியிருந்த கோவில், இதயக்கனி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், நீதிக்கு தலைவணங்கு, ஆசைமுகம், நாடோடி மன்னன் என அவரது படத்தின் பெயர் எல்லாமே மாஸ் ஆக இருக்கும். தாயை பெருமைப்படுத்துவதும், கதாநாயகனான தன்னை மரியாதை செய்வதுமான பட தலைப்புகளையே எம்ஜிஆர் வைத்தார்.
அதே போல் ரஜினியும் ஒரு காலகட்டத்துக்கு பிறகு அவரது பெயரை தன் படத்தின் டைட்டிலாகவும் வைக்க இயக்குனர்களுக்கு அறிவுறுத்தினார். உதாரணமாக பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம், அண்ணாத்த, ஜெயிலர், வீரா, முத்து, சிவாஜி, எந்திரன், கபாலி, காலா என ரஜினி படங்களுக்கு ரஜினி கேரக்டர்தான் டைட்டிலாக இருக்கும்.
ஆனால் சிவாஜி கணேசன், கமல் போன்றவர்கள் படத்தின் கதையை மையப்படுத்திய டைட்டில்களுக்கு முக்கியத்துவம் தருவர். உதாரணமாக பாவமன்னிப்பு, பாசமலர், பச்சை விளக்கு, கலாட்டா கல்யாணம், திரிசூலம், சந்திப்பு என சிவாஜி பட டைட்டில்கள் இருக்கும். கமல்ஹாசன் தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், ராஜ பார்வை, சலங்கை ஒலி, மூன்றாம் பிறை போன்ற பெயர்களில் கமல் படங்களும் இருந்தன.
அதே நேரத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன் போன்ற கேரக்டர் பெயர்களில் சிவாஜி படங்களும், அவ்வை சண்முகி, இந்தியன், குணா என கேரக்டர் பெயர்களில் கமல் படங்களும் வந்திருக்கின்றன. ஆனால் அவை மிக குறைவாகதான் வந்தன. இப்போது விஜய், அஜீத்குமார் கூட பெரும்பாலும் தங்களது பெயர்களில்தான் பட டைட்டில்களை அறிவிக்க செய்கின்றனர். லியோ, தலைவா, மாஸ்டர், பிகில், பில்லா என டைட்டில் பெயர் வைக்கின்றனர்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துவரும் அவரது 44 படத்துக்கு சிறை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி, விடுதலை என பெயர் வைத்த படங்கள் சென்டிமென்டாக ஜவ்வு போல் முடியாமல் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. இதில் தோல்வி படங்களை தந்துவரும் சூர்யாவுக்கு உள்ள ஒரே நம்பிக்கை கங்குவா தான். அந்த நேரத்தில் சிறை என்ற நெகடிவ் பெயர், படத்துக்கு வைத்தது சரியில்லையே என சூர்யா ரசிகர்கள் புலம்புகின்றனர்.





