நடிகர் சூரி, துவக்கத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். காதல், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் சில காட்சிகளில் தெரிவார். காதல் படத்தில் சேவல் பண்ணையில் தங்கியிருக்கும் பேச்சுலர் வாலிபர்களில் ஒருவராக வந்து, பரத்திடம் பேசுவார். தீபாவளி படத்தில், மீன் வியாபாரியாக சில காட்சிகளில் வருவார்.
அப்படி கேரக்டர் பெயர் இல்லாத ஒரு துணை நடிகராக வந்த சூரிக்கு, பரோட்டா சூரி என்ற அடையாளத்தை பெற்றுத் தந்த படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்து, ரசிகர்களின் மனங்களை வென்ற சூரிக்கு, தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக அமைந்தது,
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்திப் பறவை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா போன்ற படங்கள் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி சூரிக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
அத்துடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், குள்ளநரிக் கூட்டம், ஜில்லா, வேதாளம், சகலகலாவல்லவன் என பல படங்கள் அவருக்கு நல்ல காமெடி நடிகராக அடையாளம் கொடுத்து, கோடிக்கணக்கில் சம்பளத்தையும் உயர்த்தியது. சந்தானம், யோகிபாபு ஹீரோக்களாக நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், காமெடி நடிப்பில் சூரி வெகு எளிதாக முன்னிலைக்கு வந்தார்.
எனினும் சூரியும் ஹீரோவாக நடித்த விடுதலை படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன்பிறகு வெளிவந்த கருடன் படமும் ரூ. 37 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து, சூரி இனி ஹீரோதான் என்ற புதிய பயணத்தை உறுதிப்படுத்தி உள்ளது. சமீபத்தில் கருடன் சக்சஸ் மீட்டிங்கில் பேசிய நடிகர் சூரி, பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்ட நிலையில், ஒருவரை பற்றி சிலாகித்து பேசியுள்ளார்.
நடிகர் சூரி பேசுகையில், கருடன் படம், பத்திரிகையாளர்களுக்கு பிரிவ்யூ ஷோ காட்டப்பட்டது. படத்தை காண பயில்வான் ரங்கநாதனும் வந்திருந்தார். படம் குறித்து அவர் என்ன சொல்லப் போகிறாரோ, என பயந்துக்கொண்டு இருந்தேன், படம் முடிந்த பிறகு, என்னை பார்த்த அவர், படம் சூப்பர், நல்லா இருக்குது, என்றார். அதன்பிறகு எனக்கு கருடன் படம் குறித்த பயமே இல்லை. அவர் அந்த ஒரு வார்த்தை சொன்ன பிறகு பயமே போய்விட்டது, என்று பேசியிருக்கிறார்.





