நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. த செ ஞானேவல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், இந்த மாதம் 31ம் தேதிக்குள் முடிவடைய இருக்கிறது. அடுத்து தனது 171வது படமான, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கான ஸ்கிரிப்ட்டை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தனியாக ரூம் போட்டு எழுதி வருகிறார். இதற்காக பெசன்ட் நகரில் மாதம் ரூ. 3 லட்சம் வாடகையில், லக்ஷரி சூட் ரூம் போட்டு தந்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இங்குதான் லோகேஷ் கனகராஜ், 2 மாதங்களாக தங்கி கதை எழுதிக் கொண்டு இருக்கிறார். வரும் ஏப்ரலில், படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு, அந்த படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவை அழைத்து தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்தார் ரஜினிகாந்த். அவரும் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பு, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் என பல நட்சத்திரங்களை இறக்கி படத்தை உருவாக்கினார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் என வெற்றிப்படங்களை தந்த நெல்சனை அழைத்து, தனக்கான படம் பண்ண சொன்னார் ரஜினிகாந்த். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. அதனால் மனம் மகிழ்ந்து போன ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார். தனது 171 வது படத்துக்கு பிறகு ஜெயிலர் 2, ரஜினியின் 172வது படமாக இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில், காவாலா பாட்டுக்கு நடனமாடினார் தமன்னா. இதற்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சியில் நடனமாடியது மட்டுமின்றி சில காட்சிகளிலும் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்பு பல நிகழ்ச்சிகளில் அவரை காவாலா பாட்டுக்கு நடனமாட அழைக்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இதற்காக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார் தமன்னா.
இதற்கிடையே இப்போது படங்களில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் கேட்கிறார் தமன்னா. இவ்வளவு அதிகமாக கேட்கறீர்களே எனக் கேட்டால், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படமே, என் காவாலா பாட்டுக்காக தான் ஓடியது. அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கே நான் நடனமாடியதுதான் காரணம். அதனால் என் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு ரஜினி ரசிகர்கள், ஏகப்பட்ட டென்சனாகி வருகின்றனர். என்ன தலைவரே இதெல்லாம், இனிமேல் இந்த மாதிரி கிளாமர் நடிகைகளை எல்லாம் உங்க படத்துல ஆட விடாதீங்க என கோரிக்கை விடுத்துள்ளனர்.





