தமிழ் சினிமாவில் இப்போது புதிதாக ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் படம் பற்றி சொல்லும் விமர்சனங்களே அந்த படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன. அவர்கள் படம் படுமோசம் என்று சொல்லிவிட்டால் பிறகு அந்த படங்கள் ஓடுவதே இல்லை.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம், அதே போல் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா போன்ற படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதனால்தான் அந்த படங்கள் முதல் நாளிலேயே பலத்த நஷ்டத்தை சந்தித்தன.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குதான் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி திரைக்கு வருகின்றன. ஆனால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு, காலை 7 மணிக்கு படங்கள் ரிலீஸாகி காட்சிகள் திரையிடப்படுகின்றன.
அங்கு படம் பார்க்கும் ரசிகர்கள் படம் குறித்த நெகடிவ் விமர்சனங்களை தரும்போது, அது தமிழ்நாட்டில் பெரிய அளவில் எதிரொலிக்கிறது. அதனால் ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டால் இப்படி மற்ற மாநிலங்களில் இருந்து வரும் நெகடிவ் விமர்சனங்கள் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக தியேட்டர்களுக்குள் தியேட்டர் வாசல்களில் யூடியூப்பர்கள், டிவி சேனல்கள் தரப்பில் படம் குறித்த விமர்சனங்கள் படம் பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும். ஒரு வாரம் வரை படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் வராவிட்டால், அந்த படங்கள் நிச்சயமாக ஓடிவிடும் என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறுகையில், தியேட்டர் வளாகத்துக்குள் படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனம் சொல்வதை தடுத்தால் தியேட்டருக்குள் வெளியில் ரோட்டில் நின்று ரிவ்யூ சொல்வார்கள். வீட்டில் அமர்ந்துக்கொண்டு செல்போனில் ரிவ்யூ வீடியோ எடுத்து போடுவார்கள். பணம் கொடுத்து படம் பார்ப்பவர்கள் படம் நன்றாக இல்லை என்றால், அதை விமர்சிக்கவே செய்வார்கள். இதை எல்லாம் தடுப்பது என்பது சாத்தியமே இல்லாதது என்று கூறியிருக்கிறார்.





