தமிழ் சினிமாவில் நடக்கிற சில விஷயங்களை பார்த்தால் ரசிகர்களுக்கு தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல தோன்றும் அளவுக்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. இதில் இயக்குநர்கள் தரப்பில், காப்பியடித்த படங்களை தந்து ரசிகர்களை ஏமாற்றுகின்றனர். எந்த படம் என்றாலும், அது ஏதாவது ஒரு படத்தின் அப்பட்டமாக காப்பியாக இருக்கிறது.
இதில் சில இயக்குநர்கள் மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு படங்களை காப்பியடிக்கின்றனர். கொஞ்சம் விவரமான இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து கதையை உருவுகின்றனர். சிலர் கதைக் கருவை மட்டும் திருடுகின்றனர். இன்னும் சிலர், மொத்த திரைப்படத்தையும் ஈயடிச்சான் காப்பியாக எடுத்து, வசனம் உட்பட அப்படியே ரீ ரைட் செய்கின்றனர்.
வாயை பிளந்துக்கொண்டு பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, தமிழ் சினிமா மட்டுமே பார்க்கும் வழக்கமும் வாய்ப்பும் இருப்பதால், டைரக்டர் பின்னி பெடலெடுத்து இருக்கிறார் என்று அப்படியே புளகாங்கிதம் அடைந்து விடுகின்றனர். ஆனால் சகல தரப்பு படங்களையும் பார்க்கும் சிலருக்கு, பார்த்த சில நிமிடங்களிலேயே, டைரக்டரின் தில்லுமுல்லு அப்பட்டமாக தெரிந்து விடுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழ் சினிமா ஒருபுறம் ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. மறுபுறம் கிடைக்கும் வரை லாபம் என நடிகர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் கோடி கோடியாக தங்களது சம்பளத்தை பெற்றுக்கொண்டு, தமிழ் சினிமாவை இன்னும் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளிக்கொண்டு இருக்கின்றனர்.
இப்போது அயலான் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி ரூபாய். இதில் ஹீரோ சம்பளம் ரூ. 30 கோடி, வழக்கமாக 35 கோடி வாங்கும் சிவகார்த்திகேயன், டைரக்டர் ஏஆர் முருகதாஸ் என்பதற்காக ரூ. 5 கோடி குறைத்துக்கொண்டாராம். அடுத்து டைரக்டர் முருகதாஸ் சம்பளம் ரூ. 20 கோடி, படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சம்பளம் ரூ. 7 கோடி மொத்தம் ஹீரோ, டைரக்டர், இசையமைப்பாளர் சம்பளம் மட்டுமே ரூ. 57 கோடி என்ற நிலையில், படம் எடுக்க செய்ய வேண்டிய செலவு ரூ. 13 கோடி தான்.
படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி ரூபாயில், ரூ.57 கோடியை ஹீரோ, டைரக்டர், இசையமைப்பாளர் பங்கிட்டுக்கொண்ட நிலையில், மீதிமுள்ள 13 கோடி ரூபாயை வைத்துதான் படம் எடுக்கும் செலவு, மற்ற நடிகர்கள் சம்பளம், தொழிலாளர் சம்பளம், போக்குவரத்து செலவுகள், தொழில்நுட்ப செலவுகள் அனைத்தையும் தயாரிப்பு நிறுவனம் சமாளித்தாக வேண்டும். 13 கோடி ரூபாயில் படம் எடுக்க மணிகண்டன், ஹரீஷ் கல்யாண், கவின் போன்ற சின்ன ஹீரோக்களே போதுமே. இனியாவது தயாரிப்பாளர்கள் சிந்தித்தால் நல்லது.





