டிவி சேனல்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொருத்தவரை, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்தான் அந்த நிகழ்ச்சியை வெற்றியை தீர்மானிப்பவராக இருக்கிறார். அறிவார்ந்தவாராகவும், சமயோசித புத்திசாலியாகவும், உடனுக்குடன் நிலமையை சமாளிக்கும் விதமாக பேசும் தொகுப்பாளர்களே அந்த நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தி கொண்டு செல்கின்றனர்.
அதற்கு உதாரணமாக நீயா நானா கோபிநாத், பிரியங்கா, மகாபா, ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் என பலரை சொல்லலாம். ஏனெனில் அந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் சுவாரசியமாக கொண்டு செல்வதன் மூலமாகவே அவர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்க முடியும்.
அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர்தான் நடிகர் கமல்ஹாசன். அவர் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை பொருத்த வரைக்கும் ஒரு மிகச்சிறந்த தொகுப்பாளராக தான் செயல்பட்டார். தேவையான இடங்களில் காமெடியாக பேசினார். சில இடங்களில் கோபத்தை காட்டினார். சில இடங்களில் நையாண்டி செய்தார். சில இடங்களில் கவலைப்பட்டார்.
இப்படி அந்த நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப பல நேரங்களில் கமல்ஹாசனின் திறமையான தொகுப்பும், பேச்சும் அந்த நிகழ்ச்சியை விரும்பாதவர்கள் கூட சனி, ஞாயிறு தினங்களில் பார்க்க வைத்தது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன், நேற்று அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்து விட்டார்.
கமல்ஹாசனை போல, பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியாக தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி இப்போது எல்லோருடைய மனதிலும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 24 மணி நேர அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், நடிகர் சிலம்பரசனிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
அதே போல் நடிகர் சூர்யாவிடமும் பேசப்பட்டுள்ளது. ஆனால், சில காரணங்களுக்காக சூர்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக சிலம்பரசன் அல்லது விஜய் சேதுபதி இருவரில் ஒருவர்தான் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





