நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக மாறி வருகிறார். சமீபத்தில் வெளியான பராசக்தி படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் அந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய படமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அமரன் படம் போலவே இந்த படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை தந்திருக்கிறது.
எனினும் சிலர் சிவகார்த்திகேயன் குறித்து மோசமான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அதில் பத்திரிகையாளர் ஜெ பிஸ்மியும் ஒருவர். குறிப்பாக பிரபல இசையமைப்பாளர் இமான், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய சில கருத்துகள் பெரிய அளவில் இணையத்தில் வைரலானது. அப்போது இமானுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்தவர் ஜெ பிஸ்மி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் எனக்கு கிடையாது. அவரை ஆரம்ப காலத்தில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அவருடைய ஒவ்வொரு அசைவும் நகர்வும் எனக்கு தெரியும்.
அவருடன் யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களில் பலர் என்னுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால் சிவகார்த்திகேயனின் இன் அண்ட் அவுட் எனக்கு தெரியும். அந்த அடிப்படையில் நான் சிவகார்த்திகேயன் குறித்து எடுத்த முடிவு என்ன என்றால் இவர் ஒரு போலியான நபர். யாருக்கும் உண்மையாக இல்லாத ஒருவர் என்கிற ஒரு விஷயம் எனக்கு புரிந்தது. அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.
நடிகர் தனுஷில் ஆரம்பித்து தயாரிப்பாளர் ஆர்டி ராஜா இயக்குனர் பாண்டிராஜ் கேஜேஆர் ராஜேஷ் என்று யாரெல்லாம் இவருக்கு தோள் கொடுத்தார்களோ ஒரு படி உயர்ந்ததற்கு பிறகு அவர் செய்கிற முதல் வேலை அவர்களை எட்டி உதைக்கிறதுதான். அதனால் இப்படி ஒரு சுயநலக்காரரை நாம ஆதரிக்க கூடாது என்பதுதான் என்னுடைய முடிவாக இருந்தது. அது என்னுடைய உரிமை. எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை தான் நான் செய்வேன்.
அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்குகிற ஒரு நடிகர். அடுத்து சினிமாவில் விஜய் இடத்துக்கு போட்டி போடுகிற இடத்தில் அவர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் என்ன தனிப்பட்ட மோதல் இருக்கப் போகிறது? என் பார்வையில் அவர் தப்பானவர் என்பதால் நான் அவரை விமர்சனம் செய்கிறேன் என்று பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





