“இந்தியா பாகிஸ்தான்”, “இன்று நேற்று நாளை”, “காதலும் கடந்து போகும்”, “8 தோட்டாக்கள்” போன்ற பல திரைப்படங்களில் மணிகண்டன் நடித்திருந்தாலும் “ஜெய் பீம்” திரைப்படம் மணிகண்டனின் கெரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. “ஜெய் பீம்” திரைப்படத்தை தொடர்ந்து மணிகண்டன், நடித்த “குட் நைட்” திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் அதிகம் குறட்டை விடும் இளைஞனான மோகன் என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் மிக யதார்த்தமாக நடித்திருந்தார். அந்த குறட்டையால் அவரது சொந்த வாழ்க்கையில் பல அவமானங்களும் உறவு சிக்கல்களும் ஏற்படுகின்றன. தன்னுடைய குறட்டையால் தனது வாழ்க்கையே சூனியமாக ஆகிவிட்டதை நினைத்து அழுகும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
“குட் நைட்” திரைப்படத்தை தொடர்ந்து “சைத்தான்” என்ற தெலுங்கு வெப் சீரீஸில் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “மதகம்” என்ற தமிழ் வெப் சீரீஸில் தற்போது நடித்துள்ளார். இந்த “மகதம்” வெப் சீரீஸ் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவர உள்ளது.

இந்த நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்க முடியாத எதாவது சம்பவம் இருக்கிறதா?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மணிகண்டன், “எனது 19 ஆவது வயதில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு முறை டைபாய்டு காய்ச்சல் வந்தது. அது குணமான இரண்டாவது நாளில், ஒரு படத்திற்கு ஆடிஷன் சென்றிருந்தேன்.
அப்போது அங்கிருந்த உதவி இயக்குனர்களில் ஒருவர், ஒரு டயலாக் பேப்பரை என்னிடம் கொடுத்து அதனை நடித்துக் காட்டுமாறு கூறினார். அப்போது அங்கு வந்த இயக்குனர், அங்கிருந்த உதவி இயக்குனர்களை கண்டபடி திட்ட தொடங்கிவிட்டார்.
என்னை குறிப்பிட்டு, ‘இந்த மூஞ்சியையா ஆடிஷன் செய்கிறீர்கள்’ என்று திட்டிய அவர் என்னை அழைத்து, ‘உனக்கெல்லாம் நடிக்கனும்ன்னு ஆசை வரலாமா? உங்க வீட்டுல சொன்னியா? அவங்களுமே உன்னைய தடுக்கலையா?’ என்று அசிங்கப்படுத்தினார். என்னால் அந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் கூட அந்த இடத்திற்குச் சென்றால் கை எல்லாம் நடுங்கிவிடும்” என்று தனக்கு நடந்த அவமானத்தை குறித்து வேதனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.





