ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க, இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
துறைமுகத்தை மையப்படுத்தியே இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக விசாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்ந்தெடுத்து அங்கு பிரம்மாண்ட செட் போட்டு படத்தை இயக்கியிருக்கிறார்கள். இதில் வில்லனாக நாகர்ஜூனா நடித்திருக்கிறார். சோபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறிதும் இடைவேளை இல்லாமல் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தான் இது எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாகி இருந்தது. ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் மாஸ் காட்சிகளை நெல்சன் பிரமாதமாக எடுத்திருந்ததால், ஜெயிலர் திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இப்படியான சூழலில்தான் அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் இசையமைத்த அனிருத்தே இதில் பணி புரிகிறார். இந்த திரைப்படத்தில் கூடுதலாக பல்வேறு புதிய நட்சத்திரங்களையும் களம் இறக்கி இருக்கிறார் நெல்சன். உதாரணமாக தெலுங்கில் கமர்சியல் திரைப்படங்களுக்கு பெயர் போன பாலையா இதில் நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது.
அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருவதாக சொல்கிறார்கள். அதேபோல் பகத் பாசிலுக்கும் நெல்சன் ரோல் கொடுத்திருக்கிறார். அவர்தான் படத்தில் வில்லன் என்று கூறப்படுகிறது. இதுபோக மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், கேரள மாநிலம் அட்டப்பாடியில் நடந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. அடுத்ததாக கோழிக்கோடில் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற இருக்கிறது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





