“ஜெயிலர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளிவந்து ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ.400 கோடிகள் வசூலை நெருங்கியுள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றி ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம். “ரஜினி ரசிகர்கள் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் பார்த்தீர்களா என்று கூறி வருகிறார்களே?” என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த பிஸ்மி,
“இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை எப்படி வந்தது என்றால், விஜய்க்கு கிடைத்த தொடர் வெற்றி, இன்னொரு பக்கம் ரஜினிக்கு கிடைத்த தொடர் தோல்வி, இரண்டுமே ஒரே சமயத்தில் நடந்தது. ஒரு பக்கம் ரஜினியை எடுத்துக்கொண்டால் தர்பார், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

இன்னொரு பக்கம் விஜய்க்கு பார்த்தீர்கள் என்றால், ஒரு படத்தின் வசூலை அடுத்த திரைப்படம் முறியடிக்கும் அளவுக்கு ஜெயித்துக்கொண்டிருந்தது. அதனை வைத்துத்தான் நேற்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்றைய சூப்பர் ஸ்டார் விஜய் என்ற ஒப்பீட்டை சொன்னோம். இதுதான் இந்த சர்ச்சையின் தொடக்கப்புள்ளி.
ஆனால் ஜெயிலர் திரைப்படம் உண்மையில் மிகப் பெரிய வசூலை குவித்துக்கொண்டு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம் இந்த ஒரு படம் வெற்றியடைந்ததால் ரஜினிதான் மறுபடியும் சூப்பர் ஸ்டார், மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
அதற்கு என்ன காரணம் என்றால் இந்த படம் மட்டுந்தான் ஜெயித்திருக்கிறது. அடுத்து வரும் திரைப்படங்களும் தொடர்ந்து ஜெயித்தால் நீங்கள் நிச்சயமாக நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தாராளமாக கூறலாம்” என கூறியுள்ளார்.
பிஸ்மி இவ்வாறு பேசியது ரஜினி ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையை முதலில் தொடங்கியதே பிஸ்மிதான் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.





