தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி மும்முரமாக எழுந்திருக்கும் நிலைமையில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். பான் இந்தியா ஸ்டார்கள் களமிறங்கியிருக்கும் ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. பீஸ்ட் படம் பெரும் தோல்வியை சந்தித்தாலும் நெல்சன் திலீப்குமார் மீது பெரும் நம்பிக்கையை வைத்து நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
படத்திலிருந்து மூன்று சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ரசிகர்களுக்கு இலவச பாஸ், ரஜினியின் பேச்சு என களைகட்டியது ஆடியோ லான்ச். குறிப்பாக ரஜினியின் பேச்சுதான் கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்.
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என பலரும் பேசும் சூழலில் ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியிருந்தது அந்த பஞ்சாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினி இவ்வளவு கான்ஃபிடன்ஸாக பேசுகிறார் என்றால் படம் மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்றுதான் அர்த்தம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையே முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு மகனாக வசந்த் ரவியும்,மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வசந்த் ரவியை ஒரு கும்பல் கடத்திவிடும் என்றும் அவரை அந்தக் கும்பலிடமிருந்து மீட்பதுதான் கதை என்றும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
அதுமட்டுமின்றி படம் ஒரு நாள் இரவில் நடப்பது போன்று நெல்சன் திலீப்குமார் தரமான திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் படம் பார்க்கும்வரை கதையை உறுதிப்படுத்த முடியாது. குறைந்தபட்சம் ட்ரெய்லரை பார்த்துவிட்டாவது ஜெயிலர் கதை இதுதான் என முடிவுக்கு வரலாம் எனவும் தலைவர் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.
28ஆம் தேதி நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஆடியோ மட்டுமே வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.





