நடிகர் விஜய் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கேரக்டரில் மமிதா பைஜூவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 22 நாட்களாக ஜனநாயகன் படப்பிடிப்பு நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், அவர்களது வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதனால் கடந்த 22 நாட்களாக ஜனநாயகன் படப்பிடிப்புக்கு தேவையான நிதியை தர முடியாத சிக்கல் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. தினமும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பில் செலவாகும் நிலையில், சம்பளம் பேட்டா என எதுவுமே தொழிலாளர்களுக்கு தரப்படவில்லை. அதனால் 22 நாட்களாக ஷூட்டிங் தடைபட்டுள்ளது.
இதுதவிர இன்னும் 45 நாட்களுக்கு மேல் ஜனநாயகன் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி இருப்பதால், இப்போதைக்கு நிதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான நிதி நெருக்கடியில் படக்குழு சார்ந்த தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இன்னும் படப்பிடிப்பு துவங்க அறிகுறியே இல்லாததால் வருமான இழப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, இப்படி படப்பிடிப்பில் ஏதேனும் நிதி நெருக்கடி சம்பளம் பேட்டா பிரச்னை ஏற்பட்டால் உடனே நடிகர் விஜயகாந்த் படத்தின் தயாரிப்பாளரிடம் தன் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை கழட்டி கொடுத்து, உடனே தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க என்பார்.
ஆனால் அவர் அப்போது நடித்த படங்களின் பட்ஜெட் ரொம்ப குறைவு. இப்போது நடிகர்கள் வாங்கும் சம்பளமே 100 கோடி 200 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் நடிகர் விஜய் அவர் நடிக்கும் படத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு தானாக முன்வந்து உதவியிருக்கலாம். படக்குழு தொழிலாளர்களுக்கு பணப்பிரச்னையை தீர்க்க ஏதாவது உதவி செய்திருக்கலாம். ஏனென்றால் இது அவர் நடிக்கும் கடைசி படம். ஒரு கட்சியின் தலைவராகவும் இருப்பதால், இப்படி உதவியும் கூட தனது ஆதரவை அவர் பெற்றிருக்கலாம், என்று அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





