நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் என்பது ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது. விஜய் நடித்த கடைசி படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு நடிப்பை விட்டு முற்றிலுமாக விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். வழக்கமாகவே விஜய் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருப்பதால் இந்த படத்துக்கும் அபரிமிதமான வரவேற்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 13 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த படத்தில் அதர்வா முக்கிய கேரக்டரிலும், வில்லனாக நடிகர் ரவி மோகனும் நடித்திருக்கின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த படம் புறநானூறு. அந்த படம்தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்து வெளியிடுகிறது. இந்த படமும் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதியும், 5 நாட்கள் கழித்து ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸாக உள்ளது. நிச்சயமாக ஜனநாயகன் படம் நல்ல வரவேற்புடன் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் பட்சத்தில் ரிலீஸான அடுத்த 5 நாட்களில் ஜனநாயகன் படத்தை எடுத்துவிட்டு பராசக்தி படத்தை போட தியேட்டர் உரிமையாளர்கள் விரும்ப மாட்டார்கள். அது அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை தரும்.
ஆனால் பராசக்தி படமும் மிகவும் எதிர்பார்க்ககூடிய ஒரு முக்கிய படமாக தான் உள்ளது. அமரன் மதராஸி படங்களுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகும் அந்த படத்திலும் அதர்வா ரவிமோகன் ஸ்ரீலீலா போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். இப்படி பராசக்தி படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட திமுகவின் எதிர்கால அரசியல் வாரிசு இன்பன் உதயநிதி சிஇஓ வாக உள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிர்பந்தம் செய்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய சிக்கல் காத்திருக்கிறது.





