இயக்குநர் அட்லீ ஹிந்தியில் எண்ட்ரி ஆகியிருக்கிறார். முதல் படத்திலேயே பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கானை இயக்கியிருக்கிறார். ஜவானில் ஷாருக்குடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தை ஷாருக்கானே தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். அவருக்கு இதுதான் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படமானது கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்னதாக ஷாருக் நடிப்பில் வெளியான பதான் படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் அந்தப் படம் ஷாருக்குக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. எனவே அதேபோல் இந்தப் படமும் அமைய வேண்டும் என ஷாருக்கானின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
முதல் நாள் படம் பார்த்த ரசிகர்கள் எங்களது எதிர்பார்ப்பை அட்லீ பூர்த்தி செய்துவிட்டார் என பூரித்தனர். ஆனால் இந்த விமர்சனம் எல்லாம் வட மாநிலங்களில்தான். தமிழ்நாட்டிலோ ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றுகின்றனர். எப்போதும் பிறருடைய படங்களை காப்பி அடிக்கும் அட்லீ இம்முறை தன்னுடைய படங்களிலிருந்தே காப்பி அடித்துவிட்டார் என முதல் காட்சி முடிந்ததுமே பேச ஆரம்பித்துவிட்டனர்.
120 ரூபாய் டிக்கெட்டுக்கு அட்லீ 1980களிலிருந்து கடைசி மாதம் வெளியான ஜெயிலர் படம் வரை ஜவானிலேயே காண்பித்திருக்கிறார். ஒரு சீன்கூட ஃப்ரெஷ்ஷாக இல்லை. மேடையில் அட்லீ பேசும் அளவுக்கு அவரது படங்கள் திரையில் பேச மறுக்கின்றன என கடும் விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர். அதேசமயம் கதை ரீதியாக வடமாநிலங்களில் செட் ஆகும். இதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு பழைய கதை. இருந்தாலும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்த அட்டூழியங்களை கொஞ்சம் தொட்டிருக்கிறார் என பேசுகின்றனர்.
இப்படி விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதன்படி முதல் நாளிலேயே 130 கோடி ரூபாயை வசூலித்த ஜவான் இரண்டாவது 110 கோடி ரூபாயை வசூலித்தது. தற்போது மூன்றாவது நாளில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம் ஜவான். ஒரு ஹிந்தி படம் மூன்றே நாட்களில் 300 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் ஜவான் இணைந்துவிடுவது உறுதி என்கின்றனர் அவரது ரசிகர்கள்.





