எப்போதும் மற்ற திரைப்படங்களை பார்த்து காப்பியடிக்கும் அட்லி, இந்த முறை தனது சொந்த படத்திலிருந்து சில சீன்களை உருவி இருக்கிறார். இதுதான் இன்றைய தேதிக்கு ஜவான் படம் குறித்து ரசிகர்கள் கூறும் விமர்சனம். இயக்குனர் அட்லி இப்படி வறுத்தெடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல.
ராஜா ராணி திரைப்படம் வந்த காலத்திலேயே, ரசிகர்களால் மூச்சு திணற திணற அடிக்கப்பட்டார் அட்லி. அந்தப் படம் வெளியாகி, விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும், மணிரத்னத்தின் மௌன ராகம் திரைப்படத்தை அப்படியே உல்டா செய்து இந்த இயக்குனர் சுட்டு இருக்கிறார் என்று பலரும் இணையத்தில் கொடி பிடித்தனர்.
ஆனால் திரைப்படத்திற்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருந்ததால், ரசிகர்களின் குற்றச்சாட்டு கானல்நீராக கரைந்து போனது. அடடே இந்த ரூட் நன்றாக இருக்கிறதே என்பதை உணர்ந்த அட்லி, மீண்டும் மீண்டும் இந்த சேட்டையை செய்ய, அந்தப் படமும் நன்றாக இருந்ததால் அவர் மீது எழும் விமர்சனங்கள் பெரிதாக எடுபடவில்லை.
குறிப்பாக, தெறி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியில் சாதனை படைத்தாலும், அது அப்படியே விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் சாயல் போல் இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. இதேபோல் மெர்சல் திரைப்படம் வரும்போதும், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தை அப்படியே எடுத்து வைத்துவிட்டு, கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் எழுத்து இயக்கம் அட்லி என்று இயக்குனர் போடுகிறாரே என சிலர் வறுத்தெடுத்த சம்பவமும் நிகழ்ந்தது.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத இயக்குனர் அட்லி, சினிமாவில் ஏழு ஸ்வரங்கள் தான் உள்ளது. அதை சுற்றியே கதைகள் எடுக்கப்படும்போது மீண்டும் மீண்டும் வரும் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பதில் அளித்தார். கமர்சியல் படத்தை சரியாக கொடுத்தாலும், மேடைக்கு மேடை ஏறும் அவர் தான் எதையோ பெரிய அளவில் சாதித்தது போல பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. சரி, பாலிவுட் சென்றாவது திருந்தி விடுவார் என்று பார்த்தால் அங்கேயும் பல்வேறு திரைப்படங்களின் காட்சியை அட்லி வைத்திருக்கிறார்.
திரையரங்கில் உட்கார்ந்து படத்தை பார்க்கும் போது, கத்தி, சர்தார், ரமணா, மெர்சல் என ஏகப்பட்ட திரைப்படங்களின் காட்சிகளை பார்ப்பது போல் இருந்ததாக ரசிகர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தையின் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்க போராடும் மகனின் கதையாக இது எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இது 1989 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த தாய்நாடு திரைப்படத்தின் முழு கதையையும் அட்லி சுட்டு இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாத அட்லி, வழக்கம்போல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது என்று வடை சுட்டு வருகிறார் என்றும் இணையத்தில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.





