கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். படத்தில் வேலு நாயக்கர் ஆக நடித்திருந்த கமல்ஹாசன், ஒவ்வொரு காட்சியிலும் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி வாழ்ந்ததால் ரசிகர்கள் அவரை கொண்டாடினர். அந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் அவர் பெற்றார்.
இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி இணைவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக உருவாகும் இதனை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. தக் லைப் என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நீண்ட முடி முறுக்கிய மீசை என மிரட்டலாக காட்சியளித்தார் கமல்ஹாசன். என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினம் காரன் அவர் கூறும் வசனங்கள் வைரல் ஆகின.
அதுமட்டுமல்லாமல் இது கேங்ஸ்டர் படமாக உருவாவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ஜெயம் ரவி, ஏற்கனவே ஆளவந்தான் திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த நிலையில் விருது நிகழ்ச்சி ஒன்றில், ஜெயம் ரவி கூறிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
“உங்களுடைய பயணம் மிகப் பெரிய பயணம். அதில் சிறிய எறும்பாய் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்கள் பயணத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள் சார். எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். கமல் சாருக்கு இது தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை. அவரது ஆளவந்தான் திரைப்படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளேன்.
சத்தியமாக இது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவர் அங்கு வந்தால் நான் ஒரு கிலோமீட்டர் இங்கு ஓடிப் போய் விடுவேன். நான் இப்போது இப்படி நடிக்கிறேன் என்றால் அதற்கு 85 சதவீதம் கமல் சார் தான் காரணம். 15 சதவீதம் என் அப்பா காரணம். நான் உங்கள் மிகப்பெரிய வெறியன் சார்” என்று தெரிவித்தார். ஜெயம் ரவி பேசிய வீடியோவை கமல் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.





