நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சிவா மனசுல சக்தி, தெனாவெட்டு, கோ, நண்பன், முரண், ரௌத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக ஜீவா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடந்த 11ம் தேதி வெளியான பிளாக் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் ஆர்பி சௌத்ரி. இவரது இளைய மகன்தான் ஜீவா. மூத்த மகன் ஜித்தன் ரமேஷ். ஜீவா போல ஜித்தன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஜித்தன் ரமேஷ் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஜீவா காதல் படங்களில், ஆக்ஷன் படங்களில் அசத்தியிருக்கிறார்.
ஆர்பி செளத்ரிக்கு முதுமை அதிகரித்துள்ளதால் மிக விரைவில் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், நடிகர் ஜீவாவின் பொறுப்புக்கு வர இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் நடிகர் ஜீவா, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்துள்ள திகில், திரில் காட்சிகள் நிறைந்த பிளாக் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை கேஜி பாலசுப்ரமணி டைரக்ட் செய்திருக்கிறார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த டிமாண்டி காலனி 2 படமும் பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ் சினிமாவில் திரில், திகில் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிளாக் படம் ஹாலிவுட் படமான ஹோகரன்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். ஒரு புதிய வீட்டில் குடியேறும் கணவன், மனைவி ஒருநாள் இரவில் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்கள்தான் இந்த படத்தின் மையக்கரு. திகில், திரில் நிறைந்த பிளாக் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பிளாக் படத்தின் வெற்றி விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய படத்தின் ஹீரோ நடிகர் ஜீவா, இதுபோன்ற வெற்றி விழாவை இனிமேல் தியேட்டரில் வைக்காதீர்கள். ஸ்கூல் விழாவுக்கு வந்த மாதிரியே இருக்கு. ஒரு நல்ல ஓட்டலா பார்த்து வையுங்க. அதற்கான செலவை என் சம்பளத்தில் இருந்து கூட பிடித்துக் கொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரை அவமதிக்கும் விதமாக பொதுவெளியில் ஜீவா பேசியது, இப்போது வைரலாகி வருகிறது.





