நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. முதல் நாளில் 275 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலை கடந்தது. இப்போது 2 வாரங்களில் 1500 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. புஷ்பா 2 படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.
புஷ்பா 2 படம் ரிலீஸாக ஒருநாள் முன்னதாக 4ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இந்த காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூனாவும் அங்கு படக்குழுவுடன் வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் போலீசார் சந்தியா தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்தனர். கடந்த வாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை அவரது வீட்டில் போலீசார் கைது செய்து, ஒரு நாள் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு கோர்ட் உத்தரவுபடி அவர் 4 வாரங்கள் இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தின் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய ஐதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சட்டசபையில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கிட்னி, கண், காது எதுவும் பாதித்து விட்டதா, எதற்கு அவரை மற்ற நடிகர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்து வருகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்திலும், அவரது 9 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதற்கும் முக்கிய காரணம் நடிகர் அல்லு அர்ஜூன்தான் என்பதே தெலங்கானா அரசின் இத்தகைய தீவிர நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது. அவர் மீது குற்ற வழக்குகளை பலப்படுத்துவது மட்டுமின்றி இனி தெலங்கானாவில் சிறப்பு காட்சிகளே இல்லை என்ற அதிரடி உத்தரவும் பிறப்பிக்கபட்டுள்ளது.
அதாவது, நடிகர் அல்லு அர்ஜூன் இந்த பிரிமியர் காட்சிக்கு செல்ல மனு கொடுத்து அனுமதி கேட்ட போது, ஐதராபாத் போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என்று மறுத்துள்ளனர். அதையும் மீறி அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்துள்ளார். காரின் மேல் ஜன்னலை திறந்து வைத்து ரோடு ஷோ நடத்தியிருக்கிறார். மேலும் பெண் இறந்த தகவலை கூறி, அல்லு அர்ஜூனை தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேறும்படி போலீஸ் கூறியும், அதை மறுத்து படம் முடியும் வரை தியேட்டருக்குள் இருந்து படத்தை பார்த்துள்ளார். நள்ளிரவு வரை தியேட்டரில் அவர் இருந்ததற்காக சிசிடிவி காட்சிகளும் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.





