ரெட்ரோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, நட்டி உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வாய்ப்பு, ஆர் ஜே பாலாஜிக்கு கிடைக்காததால் அவர் அடுத்ததாக திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்னும் திரைப்படத்தைதான் இயக்க இருந்தார். இப்படியான சூழலில் அந்தத் திட்டம்தான் வேறு வடிவில் தற்போது கருப்புவாக வந்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
படத்தில் சூர்யாவுக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம் என்றும், அதேசமயம் கருப்பசாமி வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல் திரிஷாவும் வழக்கறிஞர் ரோலிலேயே வருகிறார். நிச்சயம் இந்த திரைப்படம் ஏதாவது ஒரு பண்டிகை நாளில்தான் வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்து இருக்கிறார் சூர்யா. ஏற்கனவே வெங்கி, தனுசை வைத்து வாத்தி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து, துல்கர் சல்மானை வைத்து அவர் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
இப்படியான சூழலில்தான் அவர் அடுத்ததாக சூர்யாவுடன் கைகோர்த்து இருக்கிறார். முதலில் தனக்கு பயோபிக் கதைகளை எடுக்கச் சொல்லித்தான் தயாரிப்பாளர்கள் முன் வந்ததாகவும், ஆனால் சூர்யாவுடன் எடுக்கும் திரைப்படத்தின் கதைக்களம் அது இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார் வெங்கி. அது மட்டுமல்ல குடும்பங்கள் சார்ந்த கதையாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மலையாள இயக்குனர் ஜித்து மாதவனுடன் கைகோர்க்க இருக்கிறார் சூர்யா. இது அவரின் 47வது திரைப்படமாக உருவாகிறது. ஏற்கனவே ஜித்து மாதவன், ஃபகத்பாஸில் வைத்து ஆவேசம் திரைப்படத்தை இயக்கி பலரது பாராட்டையும் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் சூர்யாவுக்கு போலீஸ் கதாபாத்திரம் என தகவல் கசிந்து இருக்கிறது.





