பல வருடங்களாக விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்று பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான முயற்சிகளை விஜய் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வருகிறார் என்று தெரிய வந்தாலும் அரசியல் கட்சி தொடங்குவதை குறித்த எந்த அறிவிப்பையும் விஜய் வெளியிடவில்லை. விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதுதான் அரசியல் நுழைவுக்கான முதல் படி என்று பலராலும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளிவந்தபோது திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை வாழ்த்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் அவரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து வருகிற 17 ஆம் தேதி, இந்த ஆண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ/மாணவியர்களை விஜய் நேரில் சந்தித்து சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கவுள்ளார். இந்த செய்திதான் தற்போது ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை வைத்து விஜய் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், விஜய்யை பின்னால் இருந்து ஒரு கட்சி இயக்குகிறது எனற சந்தேகம் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அப்பேட்டியில் பேசியபோது, “அரசியலுக்குள் ஒருவர் வந்தார் என்றால் அதற்கான செலவுகள் எல்லாம் கிணற்றில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிடும். அரசியலுக்குள் வந்தால் மிக பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். விஜய் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. இதற்காக அவருக்கு யாராவது கைக்கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
விஜய்க்கு பின்னால் யாரோ ஒரு கட்சி அவரை இயக்குவதாக சந்தேகம் எழுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விஜய்யை பிஜேபி இயக்குவதாக ஒரு சந்தேகம் இருக்கிறது” என்று அந்தணன் அப்பேட்டியில் கூறியுள்ளார். அந்தணன் இவ்வாறு கூறியது ரசிகர்களிடையே விவாதங்களை கிளப்பியுள்ளது.





