சமீப நாட்களாகவே ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. இதனை கொண்டு ரஜினிகாந்த் ரசிகர்கள், “ரஜினி தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார்” என்று கூறி வருகின்றனர்.
மறு பக்கம் விஜய் ரசிகர்கள், “லியோ திரைப்படம் வெளிவரும்போது தெரியும் யார் சூப்பர் ஸ்டார் என்று” என சவால் விடுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல சினிமா விமர்சகரான எஸ்.சங்கர் விஜய் ரசிகர்களை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
“விஜய் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். இரு தரப்பு ரசிகர்களும் அடித்துக்கொள்கிறார்கள். விஜய் ரசிகர்கள்தான் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் நடத்தை அநாகரீகமாக இருக்கிறது. நியாயமாக விஜய்தான் நேரடியாக தலையிட்டு இதனை தடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “மக்களுக்கே தெரியும், சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்த் மட்டுந்தான் என. விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு விதமான மன நோய். அவர்களை திருத்த முடியாது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்ற பலரும் கூறிவிட்டார்கள். ஜெயிலர் படம் மாபெரும் ஹிட் என்று.
இவர்கள் வெறுப்புணர்விலேயே உழன்றுப்போய் இது ஒரு மனநோயாகவே மாறிப்போய்விட்டது. சந்தானம் படத்தில் இன்னும் நீ என்ன பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கேல என்று சொல்வது போல் இன்னும் இவர்கள் பைத்தியக்காரனாகவே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.





