தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. காக்க காக்க வாரணம் ஆயிரம் பேரழகன் சந்திரமுகி தெனாலி குஷி ப்ரியமான தோழி என பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்காதது குறித்து பல தகவல்கள் வெளியானது. குறிப்பாக ஜோதிகாவின் மாமனார் நடிகர் சிவகுமார் தான் அதற்கு காரணம் என்றும் பேசப்பட்டது.
தனது மருமகள் ஜோதிகா தொடர்ந்து நடிப்பதை விரும்பாததால், திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று அவர் தடை போட்டதால்தான் ஜோதிகா, திரையுலகை விட்டு விலகினார் என்றும் ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டது. திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று கண்டிசன் போட்டு தான் நடிகர் சிவக்குமார், சூர்யா – ஜோதிகா திருமணத்துக்கே சம்மதித்தார் என்றும் ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஒரு கலைக்குடும்பத்தில் இருக்கும் மூத்த கலைஞர், மருமகளாகவே இருந்தாலும் ஒரு பெண்ணின் விருப்பத்திற்கும் திறமைக்கும் தடை போடுவது நியாயம் தானா என்றும் பலரும் நடிகர் சிவக்குமாரை விமர்சித்து வந்தனர். அவரது மகன்கள் சூர்யா கார்த்தியும் நடிகர்கள்தானே என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த விமர்சனமும் சர்ச்சையும் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஜோதிகா இதற்கு விளக்கம் தந்துள்ளார். இதுகுறித்து நடிகை ஜோதிகா கூறியதாவது, இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. மேலும் எனது குடும்பத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருப்பவர் மாமனார் சிவக்குமார் தான்.
வேலைக்கு செல்லும் போது வீடு குழந்தைகள் மற்றும் பொறுப்புகளை மறந்து விடுமாறு அவர் எனக்கு கூறியிருக்கிறார். அவர்தான் எனக்கு வீட்டில் உள்ளவர்களின் மிகப்பெரிய ஆதரவாளர். வீடு, குடும்பம் பிள்ளைகள் பற்றி நினைத்து கவலைப்பட வேண்டாம். வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள் என்று அவர் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார் என்றும் நடிகை ஜோதிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





