மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் புகழில் உச்சம் பெற்ற பாடகராக இருப்பவர் கே ஜே ஜேசுதாஸ். 85 வயதான நிலையில் உள்ளார். இதுவரை தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். இவரது காந்த குரலில் ஒலிக்கும் பாடல்கள், மனதை ரம்யமாக வருடக் கூடிவை. தமிழில் இவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
குறிப்பாக காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்ற தளபதி படத்திற்காக எஸ்பி பாலசுப்ரமணியமும் கேஜே ஜேசுதாஸூம் இணைந்து பாடிய அந்த பாடல், நட்புக்கு இலக்கணம் சொல்லும் ஒரு உன்னத பாடலாக உள்ளது. ஊரை தெரிஞ்சுகிட்டேன் பூவே பூச்சுடவா ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே என பல பாடல்களை சொல்லலாம்.
இந்நிலையில் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு இரத்த அணுக்கள் குறைவு பிரச்னை காரணமாக தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவியது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பாடகர் கே ஜே ஜேசுதாஸின் உதவியாளர் சேது இயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கே ஜே ஜேசுதாஸ் மிகவும் நலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறார். அவரது உடல் நலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவில் குடும்பத்தினருடன் கே ஜே ஜேசுதாஸ் நலமாக இருந்து வருகிறார். அவருக்கு உடல் நலமில்லை என்று தமிழ்நாட்டில் சென்னையில் தவறான தகவல் பரவி வருகிறது. அவர் பூரண நலத்துடன், ஆரோக்கியமாக இருந்து வருகிறார் என்று, கே ஜே ஜேசுதாஸின் உதவியாளர் சேது இயாள் அதிகாபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் கே ஜே ஜேசுதாஸின் மகன் நடிகர் மற்றும் பாடகருமான விஜய் ஜேசுதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் தந்தை கே ஜே ஜேசுதாஸ் மிகவும் நலமாக இருக்கிறார். அவரது உடல் நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தவறான இந்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது உண்மைக்கு புறம்பான வதந்தி என்று உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் கே ஜே ஜேசுதாஸ் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.





