இந்திய சினிமாவில் தற்போது சைலன்டாக பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்து வருகிறார் துல்கர் சல்மான். மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர், மலையாளத் திரை உலகை தாண்டி தமிழ் தெலுங்கு சினிமாவிலும் முத்து முத்தான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் தமிழில் துல்கர் சல்மான் நடித்த திரைப்படங்கள் தனி கவனத்தை பெற்றது என்றே கூறலாம்.
மலையாளத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர் தமிழில் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பாலாஜி இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, நஸ்ரியா நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். லிவிங்கில் வாழும் காதலர்கள் பற்றிய கதையை மிகவும் சுவாரசியமாக கொடுத்திருந்தார் மணிரத்னம். ஏ ஆர் ரகுமான் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, ஓ காதல் கண்மணி திரைப்படமும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சொல்லப்போனால் துல்கர் சல்மானுக்கு இது தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் என்ட்ரி ஆக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தனது 25வது திரைப்படத்தையும் தமிழிலேயே கொடுத்தார் துல்கர் சல்மான். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படமாக இது வெளியாகி அசத்தல் வெற்றியை பெற்றது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சுவாரசியமாக கூறியிருந்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகி இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதேபோல் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படமும் பெரும் வெற்றியை பெற்றது. நேரடி தெலுங்கு திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழுக்கும் துல்கர் சல்மானே வாய்ஸ் கொடுத்திருந்ததால் படம் இங்குள்ளவர்களுக்கும் நல்ல கனெக்ட் ஆனது.
முன்னதாக துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படமும் வாகை மேல் வாகை சூடியது. தொடர்ந்து அவர் காந்தா என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். செல்வமணி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம், ஈகோவை பேசுகிறது. துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு இடையே நடைபெறும் மோதலை இந்த திரைப்படம் பிரதிபலிப்பது அதன் ட்ரைலரை பார்க்கும் போதே தெரிந்தது. வரும் 12 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





