சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்து உள்ளார். ஏற்கனவே வெங்கி தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது சார் என்னும் பெயரில் நேரடி தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. தமிழில் வாத்தி என்னும் பெயரில் வெளியாக அது ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தை எடுத்திருந்தார் வெங்கி அட்லூரி. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைக்கதையை விறுவிறுப்பாக எடுத்துச் சென்று அசத்தியிருந்தார் இயக்குனர் வெங்கி.
இதனைத் தொடர்ந்து இயக்குனரின் அடுத்த திரைப்படம் மீது பலரது பார்வைகளும் திரும்ப, அவர் சூர்யாவுடன் கைகோர்த்து உள்ளார். படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜூ வருகிறார். ரவீனா தாண்டன், ராதிகா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருந்த இயக்குனர் வெங்கி,
இது குடும்பங்களை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாகக் கூறியிருந்தார். முதலில் பல்வேறு தயாரிப்பாளர்களும் என்னிடம், பயோபிக் ஸ்டோரியை எடுக்கவே கூறியதாகவும், ஆனால் தனக்கு அதில் விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுபோக சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய அவர், திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் படத்தையும் இயக்கத் திட்டமிட்டு இருந்தார். அந்தத் திரைப்படம்தான் தற்போது கருப்பு என்னும் வடிவில் மாறி இருப்பதாகச் சொல்கிறார்கள். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் திரிஷா சுவாசிகா யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படம் ஆக இது எடுக்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் கருப்பு திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை, திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று, கருப்பு படத்தின் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





