புன்னகை மன்னன் படத்தில் நடிகர் கமல்ஹாசன், ஒரு ஷாப்பிங் கடையில் குடை வாங்கிக் கொண்டிருப்பார். அப்போது ஒரு சின்னப் பெண், என்னைப் போல் சின்ன பையனாக மாறிக்காட்டு என்க, கமல்ஹாசன் அதே உயரத்தில் குள்ளமாக மாறி காட்டி நடந்து வருவார். அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு முன்பாக கமல் குள்ளமாக நடித்த டீசர் காட்சி இதுதான்.
அதே போல் நடிகர் பாண்டியராஜன் கன்னிராசி படத்துக்கு பிறகு இயக்கிய படம் ஆண்பாவம். இந்த படத்தில் பாண்டியன், சீதாவை பெண் பார்க்க வரும் ஒரு காட்சியில் மாப்பிள்ளையை எனக்கு பிடிச்சிருக்கு என, சீதாவுக்கு பதில் ஜன்னல் வழியாக ஒரு குட்டிப்பெண் சொல்வார்.
இந்த படங்களில் அந்த குட்டிப் பெண்ணாக நடித்தவர்தான் இன்று பாடகி கல்பனாவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார். அதுதவிர இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார். மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் நிறைய தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. கதவை உடைத்து அவரை போலீசார் காப்பாற்றியது போலவும், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பாடகி கல்பனாவின் கணவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.
தற்போது பாடகி கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பி விட்டது என்றும், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்றும் டாக்டர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பாடகி கல்பனாவின் மகள் அளித்த விளக்கம் ஒன்றில், என் அம்மா பாடகி கல்பனா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. அவர் தினமும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி விட்டது. மற்றபடி எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை. தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.





