நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த படம் தக்லைஃப். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் வருகிற 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமலே சொந்தமாக தயாரித்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் தக்லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று பேசினார். அவரது இந்த கருத்து உடனே கர்நாடகாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது.
கன்னட மொழியை நடிகர் கமல்ஹாசன் குறைத்து பேசிவிட்டார் என அங்கிருந்த கன்னட அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. தக்லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் பேனர்களை உடைத்து சேதப்படுத்தியும் தங்களது ஆவேசத்தை காட்டின. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா போன்றவர்களும் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழலில் நடிகர் கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் தக்லைஃப் படத்தை கர்நாடகா மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் தடை செய்வோம் எனவும் கர்நாடகா கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடே எச்சரித்தார். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையடுத்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை பிரதிநிதி கோவிந்த் வெளியிட்ட அறிக்கையில், கன்னட மொழி குறித்து தவறாக பேசிய நடிகர் கமல் மன்னிப்பு கேட்காததால் அவரது தக்லைஃப் படம் கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் கமல் நடித்த தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தயாரிப்பாளர் கமலுக்கு ரூ. 20 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தக்லைஃப் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடகா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அறிவித்தபடி வரும் 5ம் தேதி தக்லைஃப் படத்தை கர்நாடகா மாநிலத்தில் திரையிட அனுமதிக்கவும், அந்த தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அந்த மனுவில் கோரியிருக்கிறார்.





