நடிகர் கமல்ஹாசன் 70 வயதில் இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். சினிமாவை பொருத்த வரை அவர் என்றென்றும் சகலகலா வல்லவன்தான். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் நடன இயக்குனர் பாடகர் பாடல் ஆசிரியர் கதை ஆசிரியர் கவிஞர் தொழில்நுட்ப கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். களத்தூர் கண்ணம்மா அவர் நடித்த முதல் படம். தொடர்ந்து எம்ஜிஆருடன் ஆனந்தஜோதி படத்திலும் பார்த்தால் பசி தீரும் படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுடனும் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மகனாக நடித்த படம் தேவர் மகன். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதே போல் நடிகர் சிவாஜி கணேசனுடன் நடிகர் ரஜினிகாந்த் படிக்காதவன், விடுதலை படங்களில் நடித்திருக்கிறார். படையப்பா படத்திலும் ரஜினியுடன் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இதுவே அவரது கடைசி படமாகவும் இருந்தது.
ஆனால் எம்ஜிஆருடன் சிறுவனாக நடித்த நடிகர் கமலுக்கு பெரிய நடிகரான பிறகு எம்ஜிஆருடன் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதே போல் நடிகர் ரஜினிகாந்தும் எம்ஜிஆருடன் ஒரு படத்தில் கூட நடித்தது. இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் எம்ஜிஆரின் கலை வாரிசாக இருந்தாலும் தனது படங்களில் எம்ஜிஆர் வரும் காட்சிகள், புகைப்படங்களை காட்டியிருக்கிறாரே தவிர, எம்ஜிஆருடன் பாக்யராஜ் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.
ஆனால் ரஜினிகாந்த் கே பாக்யராஜ் போன்றவர்களுக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் நடிகர் கமல்ஹாசனுக்கு சின்ன வயதிலேயே கிடைத்து விட்டது. அவர் சிறுவனாக இருந்த போது எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் சாவித்திரி தேவி போன்ற ஜாம்பவான் கலைஞர்களுடன் நடித்தவர். அவர்களது மடியில் அமர்ந்து தோளில் விழுந்து விளையாடியவர். தமிழ் சினிமாவில் வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க என்னை கூப்பிட்டார். ஆனால் ஏற்கனவே நான் சில மலையாள படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால் அதில் மாட்டிக்கொண்டேன். எம்ஜிஆருடன் அந்த படத்தில் தம்பியாக நான் நடிக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





