கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் ஆன “இந்தியன்” திரைப்படத்தில் கமல்ஹாசன் சேனாபதி என்ற வயதான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் மிக புகழ்பெற்ற கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாகத்தான் தற்போது “இந்தியன் 2” திரைப்படம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பு என்றால் உயிரையும் கொடுப்பார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அந்த வகையில் “இந்தியன்” திரைப்படத்தில் புராஸ்தெடிக் மேக்கப் என்ற மேக்கப்பை பயன்படுத்தி கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த மேக்கப் ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தான் நிற்குமாம்.
அதே போல் “இந்தியன் 2” திரைப்படத்திலும் புராஸ்தெடிக் மேக்கப் போட்டுக்கொண்டுதான் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். இந்த வயதிலும் கமல்ஹாசன் இவ்வளவு மெனக்கெடுவதை பார்க்கையில் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்தை குறித்து மேலும் ஒரு ஆச்சரிய தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “இந்தியன் 2” திரைப்படத்தில் மேக்கப் போட்டுக்கொள்ள மட்டுமே 3 மணி நேரங்கள் செல்வாகிறதாம். மேலும் அந்த புராஸ்தெடிக் மேக்கப் ஒரு நாளைக்கு 5 மணி நேரங்கள் மட்டுமே முகத்தில் நிற்கும் என்பதால் அந்த 5 மணி நேரங்களுக்குள் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகளை எடுத்துவிட வேண்டுமாம். மேலும் அவர் அந்த புராஸ்தெடிக் மேக்கப் போட்டிருக்கும்போது அவரால் திரவ உணவுகளை சாப்பிடமுடியாதாம். ஆதலால் அந்த சமயங்களில் பழச்சாற்றை ஸ்ட்ரா போட்டுத்தான் குடிக்க முடியுமாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மேலும் “இந்தியன் 2” திரைப்படத்தில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் தற்போது படமாக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.





