நடிகர் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சமுத்திரக்கனி. அடுத்து அவர் இயக்கிய நாடோடிகள் படத்தில் நாயகனாக சசிக்குமார் நடித்திருந்தார். சமுத்திரக்கனி, சசிக்குமார் இருவருமே இயக்குனர் அமீரிடம் ராம், பருத்திவீரன் படங்களில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்கத்தில் இயக்குனராக இருந்த சமுத்திரக்கனி நல்ல கேரக்டர்களில் நடித்ததால் தொடர்ந்து படங்களில் அதிகளவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அவரது நடிப்பு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான படம் திரு மாணிக்கம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி நடிகர் கூல் சுரேஷ் கூட இந்த படத்துக்கு சவுக்கால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு பிரமோசன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு மாணிக்கம் படத்தை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்திலக பார்த்து ரசித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் சமுத்திரக்கனி, இயக்குனர் நந்தா பெரியசாமி உள்ளிட்ட திரு மாணிக்கம் படக்குழுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் 3, 4 நாட்களுக்காவது நினைவில் வந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த படத்தில் வரும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு மாணிக்கம் என்ற படம் ஒரு அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கி இருக்கும் நந்தா பெரியசாமி ஒரு அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றிய மைனா சுகுமார் விஷால் சந்திரசேகர் குணா ரகு, படத்தில் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்த ஜிபி ரவிக்குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று ரஜினிகாந்த் அதில் தெரிவித்துள்ளார்.





