குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானவர் கமல்ஹாசன். ஆனந்தஜோதி பார்த்தால் பசி தீரும் என சில படங்களில் சிறுவனாகவே நடித்தார். அதன்பிறகு சினிமாவில் கதாநாயகனாக அவர் விரும்பவில்லை. ஆரம்பத்தில் நடன கலைஞராக தான் தமிழ் சினிமாவுக்குள் கமல்ஹாசன் நுழைந்தார். அவரை நடிகராக மாற்றியவர் இயக்குனர் கே பாலசந்தர்.
நடிகராக அவரை மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடிய நிலையில் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானார். இதற்கிடையில் மலையாளத்தில் பல படங்களில் கமலுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தியிலும் சில படங்களில் நடித்தார். கமலிடம் இருந்த நடிப்பாற்றல் அவரை தமிழ் சினிமாவில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அவரும் நடிகராக தன்னை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி திறமையை வெளிப்படுத்தினார்.
16 வயதினிலே சப்பாணி அபூர்வ சகோதரர்கள் அப்பு இந்தியன் தாத்தா அவ்வை சண்முகி மாமி தசாவதாரம் 10 வேடங்கள் என கமல்ஹாசன் அடுத்தடுத்த நிலைகளில் தனது பரிமாணத்தை காட்டி தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேசும் அளவுக்கு உயர்த்திப் பிடித்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராக தயாரிப்பாளராக பாடகராக கவிஞராக திரைக்கதை எழுத்தாளராக தொழில்நுட்ப கலைஞராக சகலகலா வல்லவனாக விளங்கினார்.
இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்தார். பாஜகவை விமர்சித்தார். நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டார். ஆனால் நடிகராக கமலை கொண்டாடிய மக்கள் அரசியல்வாதியாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினர்.
கடைசி வரை போராடி பார்த்த அரசியல்வாதி கமல்ஹாசன், இறுதியில் திமுக கூட்டணிக்கே விசுவாசியாக மாறினார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் தனது சகோதரர்கள் என்று அன்பும் நட்பும் பாராட்டிய நிலையில், இன்று திமுக ஆதரவுடன் ராஜ்ய சபா எம்பி ஆக பதவியேற்றிருக்கிறார்.
இன்று பார்லிமென்டில் நடந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் உறுதிமொழி வாசித்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்பி யாக பதவியேற்றுக்கொண்டார். வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி வரை பார்லிமென்ட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கிறார். இதில் அவரது கன்னிப்பேச்சு பார்லிமென்டில் ஒலிக்கும் நாளை கமல் ரசிகா்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





