பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரெனாவத். தமிழில் தாம்தூம் படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி என்ற படத்தில், ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா ரெனாவத் நடித்திருந்தார்.
கங்கனா ரெனாவத்தை பொருத்தவரை பல விஷயங்களை வௌிப்படையாக பேசி அடிக்கடி விமர்சனங்களை சந்திப்பவர். விருது தரும் அமைப்புகளை கடுமையாக விமர்சிப்பார். தகுதியற்ற அமைப்புகள் தரும் விருதுகளை ஏற்க மாட்டேன் என நிராகரிப்பார். அரசியல் குறித்த விமர்சனங்களை செய்து கடும் சர்ச்சையில் சிக்குவார். அதனால் எப்போதும் பரபரப்பானவராக அவர் இருப்பார்.
சமீபத்தில் உலக பணக்கார்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் மும்பையில் நடந்தது. இதில் பெரிய தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், பாலிவுட் நட்சத்திர நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சி, நடனங்களும் விழாவில் இடம்பெற்றது.
ஆனால் இந்த திருமண விழாவில், பாலிவுட் நட்சத்திர நடிகையான கங்கனா ரெனாவத் பங்கேற்கவில்லை. இதுகுறித்து கங்கனா ரெனாவத், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாட மாட்டேன் என்று கூறியதை போல, நானும் ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறேன்.
அதனால், எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் நான் திருமண விழாக்களில் நடனம் ஆடுவதில்லை என்று முடிவு செய்து அதை ஒரு கொள்கையாகவே நானும் வைத்திருக்கிறேன். பல திருமண விழாக்களில் நடனமாட அழைப்பு வந்த போதும் நான் அதற்கு மறுத்து விட்டேன். அதனால் நான் விருது வழங்கும் விழாக்களில் கூட நடனம் ஆடுவது இல்லை.
நல்ல முறையில் உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன் என்றும் அந்த பதிவில் கங்கனா ரெனாவத் கூறியிருக்கிறார். தமிழில் இருந்து இந்திக்கு சென்ற நடிகை தமன்னா, இப்படி நட்சத்திர இரவு, விருது விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்களில் கலந்துக்கொண்டு காவாலா பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி, கோடிக்கணக்கில் சம்பளமாக வருவாய் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





