இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு 2.5 ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் 14ம் தேதி வெளியான படம் கங்குவா. உலகம் முழுவதும் மொத்தம் 11500 தியேட்டர்களில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் இறுதிக்காட்சியில் கேமியோ ரோலில் சூர்யாவின் தம்பி கார்த்தியும் நடித்துள்ளார். கங்குவா படம் முதல் பாகமாக வெளிவந்த நிலையில், 2ம் பாகத்தில் படத்தின் பிரதான வில்லன் கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அண்ணன் சூர்யாவுக்கு தம்பி கார்த்தி வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார்.
பாகுபலி போல கங்குவா படமும் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறிதும் பூர்த்தி செய்யவில்லை. இந்த ஆண்டில் வெளியான மிக மோசமான பிளாப் படங்கள் வரிசையில் முதலிடத்தில் இந்தியன் 2 இருந்தது. இப்போது இந்தியன் 2 படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கங்குவா முதலிடத்தை பிடித்துவிட்டதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
கங்குவா படத்தை பொருத்த வரை நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கின்றனர். பல காட்சிகளில் அரும்பாடுபட்டு நடித்திருக்கின்றனர். முக்கியமான காட்சிகளை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கின்றனர். ஆனால் படத்தில் கதை இல்லாததால் அவை எல்லாம் ரசிகர்களிடம் சிறிதும் எடுபடாமல் போய்விட்டது.
சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம். அதில் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை ஓட்டத்தில் திரைக்கதை தெளிவாக இருந்து, ரசிகர்களை அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்த்த வேண்டும். ஆரம்பம் தெரியாமல், முடிவும் இல்லாமல் இஷ்டப்படி எல்லாம் காட்சிகளை வைத்தால் ரசிகர்களுக்கு படம் பார்த்த சில நிமிடங்களிலேயே குழப்பமும், எரிச்சலும் வந்துவிடும்.
கங்குவா படத்தை இணையத்தில் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வரும் நிலையில் இந்த படம் முதல் நாளில் ரூ. 58 கோடி வசூலித்தது. 2ம் நாளில் ரூ. 33 கோடி வசூலித்து, 89 கோடியை தொட்டது. நேற்று 3வது நாளில் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. மொத்தம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 104 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்துள்ளது. இனி வரும் நாட்களில் சில கோடிகள் மட்டுமே வசூலிக்கும் நிலையில், ரூ. 120 கோடியை கூட கங்குவா கடக்க வாய்ப்பில்லை என்கின்றனர் ரசிகர்கள்.





