சூர்யா நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. இதையடுத்து தனது ஆஸ்தான இயக்குனர் பாலா உடன் இணைந்தார் சூர்யா. இதற்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமே தயாரித்தது.
கன்னியாகுமரியில் இதற்கான சூட்டிங் நடைபெற, வேலைகள் விறுவிறுப்பாக சென்றன. இதில் சூர்யா காது கேளாதவராகவும், வாய் பேச முடியாதவராகவும் நடிப்பதாக கூறப்பட்டது. பாலா பிறந்த தினத்தை முன்னிட்டு இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இப்படியான சூழலில் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அறிவித்தார்.
படப்பிடிப்பின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. அதேசமயம் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலா சூர்யாவுடன் இணைவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, எனது தம்பியுடன் சேர்வதில் என்ன இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார். இப்படியான சூழலில் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் இணைந்தார். கங்குவா என இதற்கு பெயரிடப்பட்டது.
முந்தைய பிறவிக்கும் தற்போதுக்கும் இடையே இல்லாத தொடர்பை கதை கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, நட்டி, ஜெகதி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். கிட்டத்தட்ட ஓராண்டாக இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படம் குறித்த கிளிப்ஸ் காட்சிகள் வெளியாகின.
கொடைக்கானல், தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கங்குவா படப்பிடிப்பு நடைபெற, தற்போது மீதமுள்ள காட்சிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது ரோப் கேமரா திடீரென அறுந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், சூர்யாவின் தோள்பட்டையில் அது விழுந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தற்போது ஓய்வில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கங்குவா சூட்டிங் வேலைகளும் இதனால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கராவுடன் இணைகிறார். துல்கர் சல்மான் நஸ்ரியா விஜய் வருமா ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. மொழிப்போரை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





