தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அடுத்து 2016ம் ஆண்டில் பழைய வண்ணாரப்பேட்டை படம் வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து மோகன்ஜி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் திரௌபதி. இந்த படம் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை உள்ளடக்கிய படமாக இருந்தது.
என்றாலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வெற்றி படமாக அமைந்தது. இப்போது மோகன்ஜி திரௌபதி 2 படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பாக மோகன்ஜி இயக்கிய பகாசூரன் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
திரௌபதி படத்துக்கு பின் திரௌபதி 2 படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக மீண்டும் நடித்திருக்கிறார். ரக்சனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்துள்ளார். மேலும் ஒய்ஜி மகேந்திரா வேல ராமமூர்த்தி கருணாஸ் சேஷூ சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் நாளை 15ம் தேதி பொங்கல் பண்டிகை ரிலீஸ் ஆக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திடீரென நாளை வெளியாக இருந்த திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த பதிவில் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது, பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் திரௌபதி 2 திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் இந்த முடிவை பெரிய பெரிய மனதுடன் ஏற்று எப்போதும் போல ரசிகர்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திரௌபதி 2 படம் மிகப்பெரிய உழைப்பு. பலரின் கனவு. சரியான முறையில் அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு. வரும் 23ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பராசக்தி வெளியாகி திரையரங்குகளில் ஓடும் நிலையில் வா வாத்தியார் சர்வர் சுந்தரம் தலைவர் தம்பி தலைமையில் போன்ற படங்கள் வெளியாவதால் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் திரௌபதி 2 படத்திற்கு கிடைக்காத நிலையில் இந்த படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.





