சூர்யா ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் நாயகன் சூர்யா. சென்னை மட்டுமல்லாமல் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இதற்கான பணியில் அவர் ஈடுபட்டார்.
இதற்கு முக்கிய காரணம் சூர்யாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிக அளவில் இருப்பது தான். குறிப்பாக அவருக்கு கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஹைதராபாத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது ஏராளமானோர் கூடினார்கள்.
அப்போது அவர்கள் முன்பு சூர்யா கண்கலங்கி பேசினார். தான் இரண்டு ஆண்டுகள் படம் கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் தன் மீது அன்பு வைத்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இப்படியான சூழலில் 300 கோடி ரூபாய் தயாரிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் கங்குவா திரைப்படம், வரும் வியாழனன்று வெளியாகிறது.
ஆனால் என்னவோ சென்னையின் முக்கியமான திரையரங்குகளில் படத்தின் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போது திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கும் இந்த திரைப்படம், கடந்த சனி ஞாயிறு அன்றும் நல்ல தொகை பார்த்தது.
எப்போதுமே ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டால் உடனடியாக திரைக்கு வரும் மற்றொரு பெரிய பட்ஜெட் திரைப்படம் சரி வர ஓடாது என்பது திரையரங்கு விநியோகஸ்தர்களின் கருத்தாக இருப்பதால் படத்தை வாங்க பலர் தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் கங்குவா திரைப்படத்திற்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். இதேபோல் பட விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் கூறும் பங்கிட்டுக் கணக்கும் ஏற்க முடியாத வகையில் இருப்பதாக பேசி கொள்கிறார்கள்.
இப்படி மூன்று காரணங்களும் ஒருசேர வந்திருப்பதால், கங்குவா திரைப்படத்தின் புக்கிங் இன்னும் தொடங்கப்படவே இல்லை. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், தயாரிப்பு நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.





