மலையாள சினிமாவில் 70 வயது கடந்தும் இன்னும் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இப்போதும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். நல்ல படங்களை அவரே தயாரிக்கவும் செய்கிறார். மலையாள பட இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை மம்முட்டி தயாரிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உளளது.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். பல வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார். தமிழில் ஓ காதல் கண்மணி நடிகையா் திலகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் சீதாராம் லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. அப்பா மம்முட்டியை போலவே துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக வெற்றி பெற்று வருகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் இப்போது காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் என்பவர் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் மிஸ்டர் பச்சன் படத்தில் நடித்த நடிகை பாக்யஸ்ரீ, ஹீரோ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். காந்தா படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
காந்தா படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது. இந்த சூழலில் நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக காந்தா படக் குழு, காந்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர் துல்கர் சல்மானும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அவர் இப்போது நடித்துவரும் காந்தா படம் தமிழ் நடிகர் நடிகவேள் எம் ஆர் ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தின் கதையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில் சமீப காலமாக பிரபல நடிகர்களின், பிரபல மனிதர்களின் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் இந்த காந்தா படம் ரத்தக்கண்ணீர் படத்தின் கதையாகவும் இருக்கலாம், அல்லது எம்ஆர் ராதாவின் வாழ்க்கை கதையாகவும் அந்த படம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் படக்குழு தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.





