தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு காலகட்டத்தில் நடிகராக கொடி கட்டிப்பறந்தார். எம்ஜிஆர் படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலே திருவிழா கூட்டமாக ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டிய எம்ஜிஆர் பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கி தமிழகத்தின் முதல்வரானார். நடிகராக மட்டுமின்றி அரசியல் தலைவராகவும், முதலமைச்சராகவும் எம்ஜிஆர் ஹீரோயிசம் காட்டினார்.
அதற்கு உதாரணமாக இந்த முக்கிய சம்பவத்தை சொல்லலாம். தமிழக முதல்வராக எம்ஜிஆர் ஆட்சி செய்த போது, கர்நாடகா அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட மறுத்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. டெல்டா விவசாய பூமியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி கருகும் நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் கர்நாடகா முதல்வர் ராமகிருஷ்ணா ஹெக்டே உடல் நலம் சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில் யாரை தொடர்பு கொள்வது எனத் தெரியாமல் 2 அதிகாரிகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு முதல்வர் எம்ஜிஆர் கர்நாடகாவுக்கு விமானத்தில் சென்றார்.
எம்ஜிஆர் பெங்களூரு வருவதை அறிந்த கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் ரகுபதி பெங்களூரு விமான நிலையத்துக்கே நேரில் வந்து எம்ஜிஆரை வரவேற்று தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். எம்ஜிஆருக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாப்பிட்டுக்கொண்டே ரகுபதியிடம் பேசிக்கொண்டிருந்த எம்ஜிஆர் சாப்பாட்டின் போதும், சாப்பிட்ட பிறகும் அருகில் தண்ணீர் இருந்தும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர் ரகுபதியின் தாயார், எங்கள் வீட்டில் தண்ணீர் குடிக்க மாட்டீர்களா, என்று எம்ஜிஆரை பார்த்துக் கேட்டுள்ளார். உடனே எம்ஜிஆர், நானா தண்ணீர் குடிக்க மாட்டேன் என்கிறேன். உங்கள் மகனும் அவரது நண்பர்களும்தான் எங்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்று கூறினார். இதைக்கேட்டு அமைச்சர் ரகுபதியும், அவரது தாயாரும் மனம் கலங்கி வருத்தப்பட்டார்கள்.
உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர் ரகுபதி, அடுத்த நாளே தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை திறந்துவிட ஏற்பாடுகளை செய்தார். அப்படி ஒரே நாளில் தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் எம்ஜிஆர். நடிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் எம்ஜிஆர் ஹீரோதான் என்பதற்கு இந்த சம்பவமே முன் உதாரணமாக இருக்கிறது.





