மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதற்கு முன்பு பாலாவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், சேது மற்றும் நந்தா திரைப்படங்களில் வேலைபுரிந்தார். இதன் பிறகு மௌனம் பேசியதே எடுக்க, அதில் ஹீரோவாக சூர்யா நடிக்க படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கலகலப்போடு காட்சிப்படுத்தப்பட்டதால் பலரும் அதனை கொண்டாடினர்.
இதையடுத்து, ஜீவாவை வைத்து ராம் திரைப்படத்தை அமீர் இயக்கினார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா தம்பி கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை கொடுத்தார் அமீர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய மைல்கல் பருத்திவீரன் திரைப்படம் என்று கூறலாம்.
அந்த அளவுக்கு படம் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்த நிலையில் அவருக்கும், அமீருக்கும் தற்போது பனிப்போர் ஏற்பட்டுள்ளது. பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீருக்கும் ஞானவேல் ராஜாவிற்கும் இடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. குறித்து சமீபத்தில் அமீர் பேசி இருந்தார்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த ஞானவேல் ராஜா, அமீரை தரக்குறைவாக பேசினார். இதனால் வெகுண்டு எழுந்த சசிகுமார் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் அந்த திரைப்படத்தின் பாதியில் இருந்தே ஞானவேல் ராஜா வெளியேறி விட்டதாகவும், அமீர் அண்ணன் தான் பலரிடம் கடன் வாங்கி அந்த திரைப்படத்தை முடித்ததாகவும் கூறி இருந்தனர். இந்த விவகாரம் தற்போது விவாத பொருள் ஆகியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் பேசி இருக்கும் அமீர், ரஜினிக்கு கதை கூறியதைப் பற்றி நினைவு படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஜினி சாருக்கு வரலாற்று பின்னணி தொடர்பான ஒரு கதையை கூறி இருந்தேன். ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக ஒரு ஒரு தலைவன் போராடுவது போலவும், ஆனால் அந்த மக்களின் கையாலேயே அவன் இறப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இதன் பிறகு இறந்தவனின் வாரிசுகள் வந்து அந்த மக்களை ஆள்வது போல கதை கூறினேன்.
இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தால் பரவாக இல்லையா என்று கேட்டார். கரும்பு தின்ன கூலியா என்று நான் சிரித்துக் கொண்டே கூறினேன். அந்த சமயத்தில் நான் யோகி படத்தில் நடித்துக் கொண்டிருக்க, ரஜினி சாரும் பிஸியாக இருந்ததால் அந்தத் திட்டம் வளரவே இல்லை. கதையை விஜயிடமும் கூறினேன். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவருக்கு அந்த கதாபாத்திரத்தில் ஏற்று நடிப்பதற்கான முதிர்ச்சி வரவேண்டும் என்பதால் விட்டுவிட்டோம் என்று அமீர் தெரிவித்துள்ளார்.





