நடிகர் கார்த்திக்கு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. அதேபோல அந்த திரைப்படமும் கார்த்திக்கு, பெரிய பெயரை ஒன்றும் பெற்று தரவில்லை.
இதனைத் தொடர்ந்து கார்த்திக்கு 25 ஆவது திரைப்படமாக ஜப்பான் வெளியானது. குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜமுருகன் இதனை எடுத்திருந்தார். தங்கக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதனை படம் பூர்த்தி செய்யவில்லை.
கார்த்தியின் 25வது திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்களும் பெரிதாக எதிர்பார்த்து இருந்த நிலையில், ஏமாற்றமே கிடைத்தது. இந்த நிலையில், அடுத்தடுத்து திரைப்படங்களை வெற்றியாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. ஏற்கனவே கடந்த காலங்களில் அவர் நடித்த விருமன் மற்றும் சுல்தான் திரைப்படங்கள் சரியாக போகவில்லை.
இதனால் வரும் திரைப்படங்களை மிகுந்த கவனத்துடன் அவர் தேர்வு செய்து வருகிறார். இதில் கார்த்தியின் 26 ஆவது திரைப்படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டு தரமான திரைப்படங்களை நலன் குமாரசாமி கொடுத்திருக்கிறார். இதனால் இந்த கூட்டணி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படியான சூழலில், அந்தப் பட வேலைகள் சற்று தள்ளி போக, தனது 27வது திரைப்படத்திற்காக பிரேம்குமார் உடன் கார்த்தி இணைந்தார். பிரேம் குமாரின் முதல் திரைப்படம் ஆன 96, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் இன்னொரு மைல்கல் என்று கூறலாம். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியை, வெறும் இரண்டு கதாபாத்திரங்களை வைத்து சலிக்காமல் கதையை நகர்த்தி இருப்பார் பிரேம்குமார்.
இதழில் தற்போது கார்த்தியை வைத்து அவர் குடும்ப பின்னணியில் படத்தை இயக்கியிருக்கிறார். தஞ்சாவூரை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு மெய்யழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





