96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும், அதில் 96 திரைப்படத்திற்கு ஒரு தனி இடத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு அந்த திரைப்படம் திரையரங்கில் பார்த்த ஒவ்வொருவருக்கும் கனெக்ட் ஆனதால், பலரும் அதனை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். குறிப்பாக பள்ளி பருவ காதலை, இயக்குனர் பிரேம்குமார் காட்சிப்படுத்திய விதம் இங்கு பலரையும் ரசிக்க வைத்தது.
சொல்லப்போனால் பலரும் தங்கள் பள்ளிப் பருவ காதலுக்கு அவர் அழைத்துச் சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றி போய் பிரேம்குமார் மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தார். படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியும் திரிஷாவும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தனர்.
அதிலும், 96 படத்தின் இசை ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. இப்படி அந்த திரைப்படத்தின் அத்தனை அம்சங்களும் மிகச் சரியாக இருந்ததால் தற்போது வரை அது பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேம்குமார் அடுத்ததாக கார்த்தியை வைத்து மெய்யழகன் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில், அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தஞ்சை பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மெய்யழகன் திரைப்படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தன. குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியை மையப்படுத்திய போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. இப்படியான சூழலில் தான் படத்திலிருந்து டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் அரவிந்த் சாமியை, எந்தக் கள்ளம் கபடமும் இல்லாத கார்த்தி கதாபாத்திரம் அத்தான் என்று அன்போடு அழைக்கும் வகையில் டீசர் இடம் பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் இதனைக் கேட்டு அரவிந்த்சாமி எரிச்சல் அடைவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. 96 திரைப்படத்தைப் போன்று இதுவும் இருவரின் உரையாடலை மையப்படுத்தியே படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 27ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.





