ஆரம்பத்தில் யூடியூபில் வெளியாகும் சிறு குறும்படங்களில் நடித்து வந்தவர் மணிகண்டன். திரைத்துறையின் மீது உள்ள காதலால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்ட அவர், வெள்ளித்திரையிலும் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.
விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்னும் திரைப்படத்தின் முரளி என்னும் இளைஞன் கதாபாத்திரத்தில் அவர் வருவார். இப்படியே போய்க் கொண்டிருக்க, விக்ரம் வேதா திரைப்படம் தான் மணிகண்டன் யார் என்பதை பலருக்கும் உணர வைத்தது.
அதில் புதிதாக சேர்ந்த காவலர் கெட்டப்பில் மணிகண்டன் நடித்திருப்பார். அதுமட்டுமல்ல விக்ரம் வேதா திரைப்படத்தின் வசனங்களை அவர் தான் எழுதினார் என்ற தகவல் தான் பலரையும் ஆச்சரியமடைய வைத்தது. படத்தின் வெற்றிக்கு அதன் வசனமும் ஒரு காரணம் என்று கூறலாம். இதற்கு பாலமாய் இருந்தவர்தான் மணிகண்டன்.
பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக, காலா அமைந்தது. அதில் ரஜினிகாந்தின் மகனாக நடித்து கவனம் பெற்று இருப்பார். பின்னர் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து அடுத்த உயரத்திற்கு சென்றார் மணிகண்டன். இருப்பினும் துணை கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்து வந்த அவருக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது குட்நைட் திரைப்படம்.
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக குட் நைட் அமைந்தது. மிகவும் யதார்த்தமாகவும், குறட்டை என்ற ஒரு சிறிய சிக்கலை மையப்படுத்தியும் இதன் கதை எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படமும் 2கே கிட்ஸ்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்தது.
இப்படியான சூழலில் தான் தற்போது 80 கிட்ஸ்களை மனதில் வைத்து குடும்பஸ்தன் என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் மணிகண்டன். இதற்கான முதல் போஸ்டர் வெளியாகி பலரையும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அது மட்டுமல்ல நவீன யுகத்தில் மிடில் கிளாஸ் சேர்ந்த இளைஞர்கள் படும் அவஸ்தையை இந்த திரைப்படம் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. ராஜேஸ்வர் காளி சாமி என்பவர் இந்த திரைப்படத்தை இயக்க, பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை அமைக்கிறார்.





