பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்பது எல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். டைரக்டர் அமீர்தான், கார்த்தியின் சினிமா பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தவர்.
இதுவரை தமிழ் சினிமாவில் பயணித்து 20 ஆண்டுகளில், 25 படங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. அவரது 25வது படம்தான் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கிய ஜப்பான் படம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பதே சினிமா ரசிகர்களின் விமர்சனமாக இருக்கிறது.
இந்த படத்தை பொருத்த வரை, கார்த்தியின் அந்த நடிப்பு கார்த்தியின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் படத்தின் டைரக்டர் ராஜூ முருகனை வெயிட்டிங்கில் போட்டு வைத்ததால், பழி தீர்த்துவிட்டாரா கார்த்தியை என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இந்த படத்தில், ஜப்பான் கேரக்டரில் வரும் கார்த்தி ஒரு படம் எடுப்பாராம். ஜப்பான் படத்தில் வரும், அந்த படம் கூட நன்றாக இருக்கிறது. ஆனால், இந்த படம் நன்றாக இல்லை என்பது முக்கிய விமர்சனமாக இருந்து வருகிறது. தனது 25வது படத்தை கடைக்குட்டி சிங்கம், கொம்பன், சர்தார், தோழா போன்ற கதையை தேர்வு செய்து கார்த்தி நடித்திருக்கலாம் என்கின்றனர் அவரது நலம் விரும்பிகள்.
இதற்கிடையே இந்த படத்தில் சொந்தமாக கார்த்தியே ஒரு பாடல் பாடி இருக்கிறார். அப்போது இந்த பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் கார்த்தி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நடிகர் விஜய், தனது ஆரம்ப கால படங்களில் சொந்த குரலில் பாடுவார். அப்போது அந்த பாடல் காட்சியின் துவக்கத்தில், இந்த பாடியவர் உங்கள் விஜய் என்ற அறிவிப்பு திரையில் வரும்.
அப்படி என்றால், விஜயை கிண்டலடித்து இப்படி ஜப்பான் படத்தில் கார்த்தி செய்திருக்கிறாரா என்று ஆவேசமடைந்த விஜய் ரசிகர்கள், ஜப்பான் படம் குறித்து, சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர். படமே சுமார் என்ற நிலையில், விஜய் ரசிகர்களும் ஜப்பான் படத்தை வெச்சு செய்ய, இப்போது ஜப்பான் படம் ஒரு வாரம் தாக்கு பிடிக்குமா என்ற நிலையில், தியேட்டர்கள் காற்று வாங்க துவங்கி இருக்கின்றன. மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில், ஜப்பான் காட்சிகளை குறைத்துவிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் காட்சிகளை கூடுதலாக்கி கல்லா கட்டி வருகின்றனர் தியேட்டர் ஓனர்கள்.





