நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது வீட்டின் முன் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா, அவர்களது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். மொட்டை மாடியில் நின்றபடி கீழே திரண்டு நின்றிருந்த ரசிகர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். ரசிகர் ஒருவர் வீசி எறிந்த பூங்கொத்தை லாவகமாக பிடித்து சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் தனது மொபைல் போனில் அவர் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துக்கொண்டார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கருப்பு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் சூர்யாவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் இல்லை. கடந்தாண்டில் வெளியான சரித்திர படம் கங்குவா மிக மோசமான தோல்வியை சந்தித்தது. கடந்த மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியானது. வசூல் ரீதியாக திருப்தியை அளித்த இந்த படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
காக்க காக்க கஜினி சிங்கம் சிங்கம் 2 அயன் போல ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கும் நடிகர் சூர்யாவுக்கு இப்போது கருப்பு படம் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
வருகிற தீபாவளிக்கு கருப்பு படம் ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நேற்று வெளியான கருப்பு டீசரில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. இப்போது கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிற வாய்ப்பு மிக குறைவு, அடுத்த 2026ம் ஆண்டில்தான் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம், கருப்பு படம் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதன்காரணமாக டிஜிட்டல் வியாபாரம் மூலமே கணிசமான வருமானம் படத்துக்கு கிடைக்கும் நிலையில், 2026ம் ஆண்டில்தான் கருப்பு படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அதனால் சூர்யா படத்துக்காக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்ட கார்த்தி நடித்த சர்தார் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா பிறந்த நாளில், கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என்ற லேட்டஸ்ட் தகவல் அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.





