நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் திரைப்படங்கள், ரசிகர்களிடம் அதிருப்தியை தான் சம்பாதித்து வருகின்றன. பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும், விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த்க்கு வெளியான லால் சலாம் திரைப்படம் இங்கு பாதி பேருக்கு வந்ததே தெரியாது. தொடர்ந்து பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாத சூழலில், கடந்த மாதம் திரையரங்குகளுக்கு வந்தது இந்தியன் 2 திரைப்படம். அதை அப்போது கிண்டல் அடித்தது போதாது என்று இப்போது ஓடிடி தளத்திலும் படத்தை கேலி செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அந்த அளவுக்கு இந்தியன் 2 திரைப்படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறிவிட்டது. இதனை அடுத்து ரிலீஸ் ஆன தனுஷின் ராயன் திரைப்படமும், ரசிகர்களை எந்த வகையிலும் கவரவில்லை. ஆனால் ஏ ஆர் ரகுமானின் இசை தரமாக இருந்ததால், திரையரங்குகளுக்கு பலர் படை எடுக்க, 150 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்தது.
இதனைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகி இருக்கிறது விக்ரமின் தங்கலான் திரைப்படம். கிட்டத்தட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் மிக நீண்ட நாட்கள் படமாக்கப்பட்ட திரைப்படம் இதுதான். அதேபோல் அதிக பொருட்செலவிலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் ஏற்பட்ட அவலத்தை தான் இந்த திரைப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக காண்போரின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும், குறிப்பாக ஜிவி பிரகாஷ் இசையில் ருத்ர தாண்டவம் ஆடி இருப்பதாகவும் பலர் கூறுகிறார்கள். ஆனால் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இதுவே போதாது என்று கருத்து தெரிவித்திருக்கும் சினிமா ரசிகர்கள், இரண்டாம் பாதி திரையரங்குகளில் உட்காரவே முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக படத்தில் பேசும் தமிழ் மொழி பல பேருக்கு புரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில திரையரங்குகள், ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், தங்கலான் திரைப்படம் வெளியான முதல் நாளில் ஒட்டுமொத்தமாக 16 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரும் நாட்களில் ரசிகர்களைக் கவர்ந்து வசூலை குவிக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.





