ரெட்ரோ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக உயர்ந்திருக்கும் ஆர் ஜே பாலாஜி இதனை எடுத்து இருக்கிறார். ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை தன்மீது கவனம் ஈர்க்கச் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் எடுக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ், அதற்கு முன்கூட்டியே இந்த திட்டத்தை அறிவித்தது. அது மட்டுமல்லாமல் சுந்தர் சி படத்தை இயக்க இருப்பதாகவும் தெரிவித்தது. இதனால் அதிலிருந்து பின் வாங்கிய இயக்குனர் ஆர் ஜே பாலாஜி, திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்தார். பிறகு அதிலிருந்து சற்று கதையை மாற்றி சூர்யாவிற்காக கருப்பு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இதன் பெரும்பாலான சூட்டிங் நடைபெற்றது. சொல்லப்போனால் அங்குள்ள மாசாணியம்மன் கோயிலில்தான் இதன் பட பூஜையை ஆரம்பித்தார்கள். ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் ஒரு வழக்கை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதைக்களத்தை அமைத்திருக்கிறார்கள்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரும் சூர்யா கருப்புசாமி அவதாரத்திலும் தோன்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக த்ரிஷா, சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். முதலில் ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. பிறகு அவர் அதிலிருந்து விலக இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாய்ப்பு சென்றது.
திரைப்படத்திலிருந்து வெளியான முதல் வீடியோவும் ரசிகர்களை ஓரளவு கவர்ந்தது. ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தை ஏதாவது ஒரு பண்டிகை காலத்திலேயே வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்று ஏற்கனவே அதன் தயாரிப்பாளர் கூறியிருந்தார். அப்படி என்றால் நிச்சயம் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என்று பலரும் நினைத்திருந்தனர்.
இப்படியான சூழலில் பொங்கலுக்கு ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதால், கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்த திரைப்படம் வெளியாகும் என்று பேசிக்கொள்கிறார்கள். இது சூர்யா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





