நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் லியோ. இப்படத்தில் திரிஷா, மிஸ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இப்படம் அக்டோபர் 19 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தையப் படங்களில் இருக்கும் கேரக்டர்கள் வரலாம் என்ற பேச்சுகளும் அடிபடுவதால், நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறிய வண்ணம் உள்ளது. படம் ரிலீஸ் ஆகும் முன்னே ரூ.500 கோடி பிசினஸ் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் நாளில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியிருந்த ‘நான் ரெடிதான் வரவா’ பாடல் ஜூன் 22இல் விஜய்யின் பிறந்தநாளில் வெளியானது. இப்படாடலில் விஜய்யின் குரலும், டான்சும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அது மட்டுமல்லாது இந்த பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை அறிவிக்கும் விதமாக இருப்பதாகவும் சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
பாடல் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், தற்போது வரை நான் ரெடிதான் பாடல் யூடியூப்பில் 79 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதே வேளையில் இம்மாத தொடக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடல் 81 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதனை குறிப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வயதானாலும் எப்போதும் சிங்கம் சிங்கம்தான், இனி எங்களிடம் இந்த நம்பர் கேம் எல்லாம் வேண்டாம் என சிலாகித்து வருகின்றனர். இதே வேளையில் விஜய் ரசிகர்களோ அந்தப் படல் தமன்னாவுக்காக தான் அதிக முறை பார்க்கப்பட்டிருக்கும் என்றும், வயதான சிங்கத்திற்கு இல்லை என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர். எது எப்படியோ இந்த இரண்டு பாடலுக்கும் இசையமைத்த அனிருத் ஹேப்பிதான்.





