தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் நடனக்குழுவில் பல பாடல்களுக்கு கூட்டத்தில் ஒருவராக ஆடியவர். பிறகு ஸ்டண்ட் காட்சிகளில் அடியாளாக வந்து ஹீரோவிடம் அடி வாங்கிய ஸ்டண்ட் கலைஞர். இப்படி ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இப்படிதான் மன்சூர் அலிகான் இருந்திருக்கிறார்.
ஆனால் அவரது திறமையை ஆர்வத்தை கவனித்த நடிகர் விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன் படத்தில் அவருக்கு வீரபத்ரன் என்ற வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்து, முன்னணி நடிகராக மாற உதவினார். அந்த நன்றியை இன்றுவரை மறக்காமல் கேப்டன் மீது மரியாதை மதிப்பு கொண்டவர்தான் மன்சூர் அலிகான்.
ஆனால் இப்போது மட்டுமின்றி, ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அதிகமாக வாய் பேசக்கூடியவர்தான் மன்சூர் அலிகான். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கொஞ்சம் திமிரமாகவும் எடுத்தெறிந்து பேசுவதும்தான் அவரது சுபாவம். ஒருமுறை இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டண்ட் மாஸ்டர், பைட் மாஸ்டர்களுடன் தெனாவெட்டாக பேசியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
அடுத்து நடந்த சண்டை படப்பிடிப்பு காட்சியில், சண்டையிடுவது போல் நடிக்காமல் உண்மையிலேயே மன்சூர் அலிகானை அங்கிருந்த பைட் மாஸ்டர்கள் தாக்கி உள்ளனர். வில்லங்கமாக பேசியதால் வந்த வினை என்பதை தெரிந்துக்கொண்ட மன்சூர் அலிகான், அதன்பிறகு ஸ்டண்ட் கலைஞர்களிடம் எச்சரிக்கையாகவே பேசி பழகுவாராம்.
சமீபத்தில் நடந்த ஒரு ஷூட்டிங்கில் நடிகர் கவினும் இப்படி ஒரு பஞ்சாயத்தை இழுத்து விட்டிருக்கிறார். படத்தில் பைக் வரும் அடியாட்கள், கவின் மீது மோதுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது வேகமாக வந்து மோதுவது போல் அந்த காட்சியில் நடித்த ஸ்டண்ட் கலைஞரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியிருக்கிறார் கவின்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடிகர் கவினை அழைத்து கடுமையாக கண்டித்திருக்கிறார். மன்சூர் அலிகான் போல இவரும் ஸ்டண்ட் மாஸ்டர், பைட் மாஸ்டர்களிடம் வரம்பு மீறி பேசினால் அவருக்கு நடந்தது போலவே, கவினுக்கும் படத்தில் வரும் சண்டை காட்சியை நிஜ சண்டை காட்சியாக ஸ்டண்ட் மாஸ்டர் மாற்றிவிடுவார். கவின் போன்ற வளரும் நடிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் மரியாதையாக நடந்துக்கொள்வது அவசியம் என இத்தகவலை வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.





